மோடி அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற தவறான கொள்கைகளால் நாட்டின் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில் மோடி அரசு தற்போது இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. மோடி அரசின் இந்த திட்டத்திற்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆங்காங்கே பொதுமக்களும் மாணவர்களும் பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் தாக்கம் காரணமாக வெஸ்டன் அசெட் என்ற அமெரிக்க நிறுவனம் இந்திய அரசு பத்திர முதலீட்டை குறைத்துள்ளது.
இந்திய பத்திர முதலீட்டில் இருந்து வெளியேற்றிய பணத்தை வெஸ்டன் அசெட் நிறுவனம் மலேசியா மற்றும் சீனா நாடுகளின் நீண்ட கால முதலீட்டு அடிப்படையில் அரசு பத்திரத்தில் முதலீடு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் முதலீட்டை வெளியேற்றத்தின் மூலம் இந்திய அரசு பத்திரத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு அளவு 3 மாத சரிவை அடைந்துள்ளது.
இதேபோல் ஆசியாவின் முதலீட்டு மேலாண்மை அமைப்பின் தலைவர் டெஸ்மாண்ட் சூன் கூறுகையில், பிரதமர் மோடி தனது கவனத்தைச் சிதறடிக்கும் விஷயங்களை விடுத்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டு வரும் பணியில் இறங்க வேண்டும், நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு வரும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். நாங்களும் இந்தியப் பத்திர முதலீட்டைக் குறைக்கத் திட்டமிட்டு வருகிறோம் என்று டெஸ்மாண்ட் சூன் சிங்கப்பூரில் நடந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.