tamilnadu

img

அதிமுக, பாஜக அணியை யாராலும் காப்பாற்ற முடியாது.... சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி....

திருவண்ணாமலை:
தந்தை பெரியாரின் 47 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாசாலையில் உள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.பாலகிருஷ்ணன், “மதவெறியை எதிர்த்து போராடிவந்த பெரியாரின் கொள்கைகளுக்கு எதிராக, பாஜக மதவெறியை  பரப்பி வருகிறது. பெரும்பான்மை மக்களையும், சிறுபான்மை மக்களையும் மோதவிட்டு, கலவரங்களை தூண்டி மக்களை துன்புறுத்துகிறது பாஜக அரசு,  அதற்கு எடப்பாடி அரசு துணை போகிறது” என்றார்.சில தினங்களாக சிறுபான்மை மக்களுக்கு துணை நிற்போம், கேடயமாக இருப்போம் என எடப்பாடி பேசிவருகிறார். ஆனால், முத்தலாக் சட்டம், சிறுபான்மை மக்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கும் குடியுரிமைச் சட்டங்களுக்கு முழு ஆதரவு அளித்துவிட்டு சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்போம் என்று கூச்சமில்லாமல் கூறுகிறார் எடப்பாடி என்று சாடினார்.
எட்டு வழிச் சாலை திட்டம் குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கையில், “எட்டு வழிச் சாலை திட்டத்தை தமிழக அரசு  தொடங்கினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தும்” என்றார்.

காவடி தூக்கும் ஆட்சியாளர்கள்
யார் வேண்டுமானாலும் புதிதாக கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடலாம். அதனால் திமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதிமுக, பாஜக கூட்டணியை யாராலும் பாதுகாக்கவே முடியாது என்றும் அவர் கூறினார். அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, ஆளும் கட்சி அமைச்சர்கள் மீதான எந்த புகார் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்காகவே பிரதமர் மோடிக்கு எடப்பாடி அரசு காவடி தூக்கி வருகிறது என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.`

;