tamilnadu

img

மோடியின் பேச்சில் ஹிட்லரின் குரல்! வைகோ கடும் தாக்கு

திருப்பூர், ஏப். 12 -கோவைக்கு வந்து பிரச்சாரம் செய்த மோடியின் பேச்சில் ஹிட்லரின் குரல் ஒலிக்கிறது. ஆகவே, இந்தியாவையும், தமிழகத்தையும் பாதுகாக்க மோடியை மக்கள் தோற்கடிக்க வேண்டும்என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கே.சுப்பராயனை ஆதரித்து வியாழக்கிழமை மாலைதிருப்பூர் வெள்ளியங்காடு, காங்கேயம் ரோடு சிடிசிகார்னர் மற்றும் அவிநாசி சாலை கோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் சந்திப்பு ஆகிய இடங்களில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் கூறியதாவது: கோவைக்கு வந்து பிரச்சாரம் செய்த மோடியின் பேச்சு ஆபத்தானதாக, நம்மை கவலைப்பட வைக்கிறது. புல்வாமாவில் உயிரிழந்த படை வீரர்களின் தியாகத்தைச் சொல்லி வாக்களிக்கும்படி கேட்கிறார். மோடியின் பேச்சில் ஹிட்லரின் குரல், முசோலினியின் குரல் ஒலிக்கிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த படை வீரர்கள் நமது எல்லைச் சாமிகள்.


அங்கு உயிரிழந்தவர்களில் இரண்டு முஸ்லீம்கள் உள்ளனர். நம் நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசை ஒழித்துக் கட்ட நினைக்கிறது பாஜக. மோடி கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் பிரதமராகத்தான் செயல்பட்டார்.காவிரியின் குறுக்கே அணை, நீட் தேர்வு, விளைநிலங்களில் எரிவாயு குழாய், மின்கோபுரங்கள் அமைப்பது என அடுத்தடுத்து பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு தமிழகத்தை மோடிவஞ்சித்துவிட்டார். கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு வருத்தம் தெரிவிக்காதவர் மோடி. சமஸ்கிருத வகுப்பு நடத்தப் போவதாக தேர்தல் அறிக்கைவெளியிடுகின்றனர். பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும் அதிமுக ஆட்சியாளர்களை பயன்படுத்தி கூட்டணி அமைத்துள்ளது பாஜக. எனினும் இந்த தேர்தலில் அவர்கள் மிகப்பெரும் தோல்வியைச் சந்திப்பார்கள்.கேபிள் கட்டணத்தை உயர்த்திவிட்டனர். எரிவாயுஉருளை விலையை உயர்த்திவிட்டனர். அடுக்கடுக்காக மக்கள் மீது தாக்குதல் தொடுக்கின்றனர்.


3000 ஆண்டு பழமையான நாகரிகம் என ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு வெளிப்படுத்துகிறது. மண்ணுள் மறைந்த பூம்புகார் 12 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்டது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒற்றை மொழி, ஒற்றை மதம், ஒற்றை கலாச்சாரம் என ஆதிக்கத்தைத் திணிக்க முயலும் ஆர்எஸ்எஸ், பாஜக கும்பல் தமிழகத்தின் மீது வெறுப்பு கொள்வதற்கானக் காரணத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.மகாத்மா காந்தி உருவத்தை கத்தியால் குத்தி, துப்பாக்கியால் சுட்டு, அந்த உருவ பொம்மையை எரிக்கும் செயலில் காவிக்கூட்டம் ஈடுபட்டுள்ளது. எனவே இந்தியாவை பாதுகாக்க, தமிழகத்தை வஞ்சித்த மோடி அரசை தோற்கடிக்க வேண்டும். இதனை உறுதிசெய்ய திருப்பூர் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயனுக்கு வாக்களிக்குமாறு வைகோ கேட்டுக்கொண்டார்.இந்த பிரச்சார நிகழ்வில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

;