tamilnadu

img

தில்லியில் விவசாயிகள் எழுச்சி.... ஆதரவுப் போராட்டத்தில் பங்கேற்க விவசாயத் தொழிலாளர்கள் அழைப்பு....

திருச்சிராப்பள்ளி:
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் ஞாயிறன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் மாநிலத் தலைவர் ஏ.லாசர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மத்திய பாஜக அரசு வேளாண் விரோத சட்டங்களை உடனே ரத்து செய்ய வேண்டும் என பஞ்சாப், அரியானா மற்றும் வட மாநில விவசாயிகள் தில்லியை நோக்கிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களில்ஈடுபடும் விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களை அழைத்துப் பேசி தீர்வு காணாமல் மத்திய பாஜக அரசு தில்லி காவல்துறையை பயன்படுத்தி கடுமையான தடியடி, தண்ணீர் பீச்சி அடித்தல், சாலையின் குறுக்கே பெரிய பள்ளங்களை தோண்டி போராட்டத்தின் பேரணியை தடுத்துநிறுத்த குறுக்கு வழியை கையாள்வதை ஏற்கமுடியாது. உடனே பாஜக அரசு விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களை அழைத்து பேசியும், விவசாயிகளுக்கு விரோதமான 3 அவசர சட்டங்களை ரத்து செய்யவும் வேண்டும். இந்த அவசர சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள் நடத்தும் தொடர் போராட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கமும் பங்கேற்கிறது. 

நிவர் புயல் நிவாரணம் தருக!
கடந்த நவ.25 அன்று புதுச்சேரிக்கு அருகில் கரையை கடந்த நிவர் புயல் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களையும் மற்றும் புதுச்சேரியையும் கடுமையாக தாக்கியுள்ளது. மழையும், காற்றும் இந்த மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கூரை வீடுகள், காலனி வீடுகள் பெருமளவு சேதம் அடைந்துள்ளன. புயல் தாக்கும் நாட்களில் விவசாய தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்தனர். கடந்த 3 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழை காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் கடந்த 4 நாட்களாக மழை நீரில் மிதக்கிறது. 

எனவே போர்க்கால அடிப்படையில் வெள்ளநீரை தமிழக அரசு அப்புறப்படுத்த வேண்டும். இந்த மழை வெள்ளத்தில் 4 பேர் மரணமடைந்துள்ளனர். 61 மாடுகளும், 5 எருதுகளும், 65 கன்றுகளும், 114 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. இறந்தவர்களுக்கும், இறந்த ஆடு, மாடுகளுக்கும் உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும், புயலால் சேதமடைந்த ஓட்டு வீட்டிற்கு ரூ.1.50 லட்சம், கூரை வீட்டிற்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநில பொருளாளர் எஸ்.சங்கர், மாநில செயலாளர்கள் அ.பழநிசாமி, கே.பக்கிரிசாமி, எஸ்.பூங்கோதை, எம்.சின்னத்துரை உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன், மாநகர் மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ், மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

;