tamilnadu

img

ராணுவ வீரர்களின் மரணத்தை கூட அரசியலாக்க மோடி முயற்சிக்கிறார்

திருச்சிராப்பள்ளி, ஏப்,11-திருச்சி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் புதனன்று எடமலைப் பட்டிபுதூர் பகுதியில் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்கமிட்டி செயலாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர்கள் ராஜா,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திராவிடமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி அருள், மதிமுக வெல்லமண்டி சோமு, இந்திய முஸ்லிம் லீக் கட்சி மாநில தலைவர் ரகுமான் ஆகியோர் பேசினர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் பேசுகையில், நீட் தேர்வால் தமிழகமாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்து போய் உள்ளது. அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக் கனியாக உள்ளது. மத்தியஅரசால் தமிழகத்தின் கல்வி, விவசாயம்,தொழில் பாதித்த போது தமிழகத்தின் உரிமை குறித்து பேச வக்கில்லாத அரசுஎடப்பாடி அரசு. மோடியின் கையில் நாடுபாதுகாப்பாக உள்ளது என முதல்வர் கூறுகிறார். கல்வி, விவசாயம், தொழில் ஆகியவற்றிற்கு பாதுகாப்பு இல்லை. எடப்பாடியின் ஊழல்வாதிகள் தான் மோடியின் கையில் பாதுகாப்பாக உள்ளனர். திருச்சி தொகுதியின் வளர்ச்சி பணியில் கூட மோடி அரசு வஞ்சித்துள்ளது என்றார். டி.கே.ரங்கராஜன் எம்.பி தனது சிறப்புரையில் பேசியதாவது, மத்திய அரசின் கொள்கைகள் பொருளாதார அளவில் மக்களை பெருமளவு பாதித்துள்ளது. உலக வங்கியின் அறிக்கையில் கூட 2019 ஆம் ஆண்டில் கூட விவசாயம், தொழில் பெரிய அளவில் வளர்வதற்கு வாய்ப்பில்லை என நேற்றைய தினம் அறிக்கை கொடுத்துள்ளார்கள். மேட் இன் இந்தியா என்பது ஏற்கனவே இருந்தது. இதன் மூலம் தான் பஞ்சாலைகள், பெல், துப்பாக்கி தொழிற்சாலை போன்றவை வந்தன. மேட் இன் இந்தியாஎன்ற கோஷத்தின் புதிய கோஷமே மேக்இன் இந்தியா. மோடி இந்த கோஷத்தைவைத்த பின் மேட் இன் இந்தியாவும் வளரவில்லை, மேக் இன் இந்தியாவும் வளரவில்லை. தமிழகத்தில் சிவகாசியில் எல்லாபட்டாசு தொழிற்சாலைகளும் மூடப் பட்டுள்ளன. இதனால் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். அதேபோல் கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய ஊர்களில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள் ளன. 1000, 500 ரூபாய் செல்லாது எனமோடி சொல்லிவிட்டார். இதனால் 86 சதவீத பணபுழக்கம் திடீரென நின்றுவிட்டது.இதனால் யாரும் கோபப்படவில்லை. இதுதான் பாசிசத்தின் திறமை. கள்ளப்பணத்தை, கருப்பு பணத்தை, ஊழலை,தீவிரவாதத்தை ஒழிக்கின்றேன் என்றுசொன்ன போது நமது மக்கள் நம்பினார்கள். நேற்று தான் மாவோயிஸ்ட்டுகள் எம்எல்ஏ உள்பட 5 பேரை கொன்றுள்ளனர். எல்லையில் நமது சிப்பாய்கள் 42 பேர் கொல்லப்படுகின்றனர். சிப்பாய்களின் சாவை கூட அரசியலாக்க மோடி முயற்சிக்கிறார். இதுதான் ஆர்எஸ்எஸ் பாசிசத்தின் பாதை. இதைதொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் மக்கள் மத்தியில் எடுத்து சொல்ல வேண்டும்.


ஒரு அரசு தன்னை ஒரு மதத்துடன் தன்னை இணைத்து கொண்டாலே மற்ற மதத்தினர் இரண்டாம் கட்ட பிரதிநிதிகள் ஆகி விடுவார்கள். கோயம்புத்தூர் கலவரத்தில் அழிக்கப்பட்டது முழுவதும்முஸ்லிம்கள் தொழில். அங்கு அழிக்கப்பட்டது முஸ்லிம்கள் தொழில் அல்ல;தேசிய தொழில், இதனை எப்படி ஏற்கமுடியும். இந்த நாட்டின் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் ஆர்எஸ்எஸ் காரர்கள். மதச்சார்பற்ற அரசியல் சட்டம்தேவையில்லை. மனுதர்மம் தான் தேவைஎன கூறுபவர்கள் ஆர்எஸ்எஸ்காரர்கள். நமது தேசிய கொடியை அன்றும், இன்றும்ஏற்றுக்கொண்டதே கிடையாது. மோடி நாடாளுமன்றத்தை கும்பிடுவது நாடகம். பாஜக பொருளாதார கொள்கை நம்மை பாதுகாக்கவில்லை. அதனால் தான் ஆலைகள் மூடப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. புதிய வேலை வாய்ப்புகள் இல்லை. விவசாயம், கல்வி பாழடைந்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு 20 சதவீதம் வியாபாரம் நலிவடைந்து விட்டது. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் தான் அரசு தனது பொருளாதார, சமூக கொள்கைகளை மாற்ற வேண்டும் என்ற இந்த போராட்டம் நடைபெறுகிறது.பல்வேறு கொள்கைகள் உள்ள கட்சிகளை மதச்சார்பற்ற என்ற எண்ணம்தான் அனைவரையும் கட்டிப்போட்டுள் ளது. நீட் தேர்வு குறித்து தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப் பட்ட தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பப்படவே இல்லை. பாரதிய ஜனதா கட்சி தமிழ் மக்களை அவமானப்படுத்தி உள்ளது. இதனை மக்கள் உணர்ந்தால் இந்தபகுதியில் வெற்றிப்பெறுவது கை சின்னமாக தான் இருக்க வேண்டும். கமலஹாசன் ஜிஎஸ்டி குறித்து பேசுவதே இல்லை. ஜிஎஸ்டியால் கடலைமிட்டாய், ஊறுகாய் போன்ற குடிசை தொழில்கள் மூடப்பட்டுவிட்டன. 


மோடி இந்தியாவின் பிரதமர் அல்ல. 5 ஆண்டுகள் அவர் குஜராத்தின் பிரதமர்.குஜராத்திகளாக இருக்கக் கூடிய அதானிக்கும், அம்பானிக்கும் சேவை செய்தார். மோடி கட்சியில் உள்ளவர்கள்செய்யும் ஊழல் குறித்து என்னிடம் கேட்டால் நான் சொல்ல தயார். வருமானவரித்துறையினர் ஓபிஎஸ் வீட்டிற்கு செல்லாதது ஏன். பாஜக கட்சியினர் வீட்டிற்கு செல்ல தயாரா? எனவே இந்தஆட்சி மிகமிக ஆபத்தான ஆட்சி. வடநாடு என்பது வேறு, தமிழ்நாடுஎன்பது வேறு. வடநாட்டில் பசுமாட்டை கும்பிடுவார்கள். ஆனால் பசுமாட்டை கும்பிட்ட காந்தியை சுட்டுக் கொன்றனர். தமிழ்நாட்டில் பயிர் வாடினால் கூட அது வாடுவதை பார்த்து வருந்தக் கூடிய மக்கள் நம் மக்கள். இங்குஅனைவரும் ஒரேகுலம். தமிழ்நாட்டின் ஒற்றுமை, பாரம்பரியம், முற்போக்கு கருத்துகளை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து வீடு, வீடாகச் சென்று கை சின்னத்திற்கு வாக்கு கேட்டுகாங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் அமோக வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்றார்.கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள், பகுதிக் குழு உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன் வரவேற்றார். முடிவில் பகுதிக்குழு உறுப்பினர் லெனின் நன்றி கூறினார்.

;