கொடைக்கானல்:
கொடைக்கானல் மலர் கண்காட்சிக்காக பிரையண்ட் பூங்காவில் முதல்கட்டமாக 60 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு பணி தொடங்கியுள்ளது.மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இடமாக தோட்டக் கலை துறைக்கு சொந்தமான பிரையண்ட் பூங்கா அமைந்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் மே மாதம், இங்கு மலர் கண்காட்சி நடைபெறும்.இந்த மலர் கண்காட்சியில் பல லட்சக் கணக்கான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும். மலர் கண்காட்சியை காண்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர்.கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கடந்த வருடம் நடைபெறவிருந்த 59ஆவது மலர் கண்காட்சி, கொரோனா ஊரடங்கின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.தற்போது, 2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மலர் கண்காட்சிக்காக, பூங்காவில் நடவு பணி தொடங்கியுள்ளது.இதுகுறித்து பிரையண்ட் பூங்கா நிர்வாகம் கூறும்போது, “மலர் கண்காட்சிக்காக நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப் பட்டு வருகிறது. இதில் சால்வியா, அஷ்டமேரியா, டெல்பினா, மேரிகோல்ட், பிங்க் ஆஸ்டர், பிளாக்ஸ் உள்ளிட்ட 60ஆயிரம் நாற்றுக்கள் முதல்கட்டமாக நடவு செய் யப்பட்டன.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக பல லட்சம் மலர்கள் பூத்துக்குலுங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.தொடர்ந்து தமிழ்நாடு மட்டுமின்றி, பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் மலர் நாற்றுகள் கொண்டுவரப்பட்டு நடவு செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.