tamilnadu

img

பாலைவனமாகும் டெல்டா! பாதுகாக்க வேண்டாமா?

1977-78ஆம் ஆண்டுகளில் கள ஆய்வுக்காக தஞ்சாவூருக்கு சென்றபோது கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் ஜி.வீரய்யன் உடனான தொடர்பு, மதுரையில் தோழர் என். சங்கரய்யா, கோவையில் தோழர் ஆர்.வெங்கிடு போன்றவர்களுடனான நட்பையும் சந்திப்பையும் மகிழ்ச்சி பொங்க நினைவுகூர்கிறார் பேராசிரியர் ஜனகராஜன். நாற்பதாண்டுகளுக்கும் மேலாக காவிரி பாசனப் பகுதியில் வேளாண்மை இயக்கங்களோடு இணைந்து செயலாற்றி வரும் பேராசிரியர் ஜனகராஜன், இன்றைய டெல்டா பகுதியின் துயரார்ந்த நிலைமையையும், ஆளுங்கட்சியின் அலட்சியத்தையும் வரலாற்றுப் பின்புலத்தோடு பேசியதிலிருந்து...கடலுக்கு அருகில் உள்ள ஒரு பரந்து விரிந்த நிலப்பகுதிதான் டெல்டா (பாசனப் பகுதி) என அழைக்கப்படுகிறது. அது மேடு பள்ளமான பகுதியாக இருக்காது. இன்றைய கடல் மட்டத்திலிருந்து

பத்து மீட்டர் உயரத்தில் மட்டுமே இருப்பதால் கடல்மட்ட உயர்வு, கடல்நீர் நிலத்துக்குள் வருவது, கடலரிப்பு எனப் பல பாதிப்புகள் இப்பகுதியில் ஏற்படும். எனவே, காவிரி பாசனப் பகுதி முழுவதையும், (திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம்) தாழ் (Low Elevation Coastal Zone) கடற்கரை மண்டலம் என்று அறிவிக்கவேண்டும். இப்படி வரையறுக்கப்பட்ட இடம் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகிற (Vulnerable Zone) நிலப்பகுதி.


அடுத்து, டெல்டாவை பொறுத்தவரை 70 சதவீதமானநிலப்பகுதி களிமண் பூமி. அது சாதாரண களிமண் அல்ல,பிளாஸ்டிக் களிமண். அந்த களிமண்ணில் ஒரு சொட்டு,ரெண்டு சொட்டு தண்ணீர் விட்டால் அப்படியே இருக்கும்,உள்ளே போகாது. அந்த அளவுக்கு தண்ணீர் உறிஞ்சக்கூடிய தன்மை மிகக் குறைவு. கரிகாலன் கல்லணையை கட்டியது, நீர் விநியோகத்தை முறைப்படுத்துவதற்காகத்தான். கல்லணை இல்லாதபோது வெள்ள நீரால் டெல்டா பகுதி சூழப்பட்டிருந்தது. கல்லணை நீர் சேகரிப்பு மையம் அல்ல. வெள்ளநீர் சூழாமலிருப்பதற்காக கொள்ளிடத்திலிருந்து திருப்பி விடுவதற்கு ஏதுவாகக் கட்டப்பட்டது கல்லணை.டெல்டா நிலப்பகுதியில் நெல் மட்டுமே முதன்மைப் பயிராக பயிரிட முடியும். வேறு பயிர் பண்ணுவது சாத்தியமில்லாது. இருந்தாலும் சமீபகாலமாக பருப்பு, பருத்தி பயிர்களை விளைவிக்க விவசாயிகள் முயன்று வருகின்றனர். ஆனால், களிமண் மிகுந்த நிலத்தில் நெற்பயிருக்கு மாற்று இல்லை என்பதே உண்மை. இன்றைக்கு தமிழகம் உணவுப் பாதுகாப்பில் தன்னிறைவோடு இருப்பதற்கு தஞ்சை டெல்டா பகுதியே காரணம்! இப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு வேளாண்மை தவிர்த்து வேறு தொழில் எதுவும்தெரியாது. இங்கு வேளாண் தொழில் பாதிக்கப்பட்டால், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்என்பது நிதர்சனம். 1900ஆம் ஆண்டு வரலாற்று ஆவணங்களின்படி கல்லணையின் கீழே ஆறுகள், முதன்மைக் கால்வாய்,கிளைக் கால்வாய், பாசனக் கால்வாய்கள் உள்ளிட்ட மொத்த கால்வாய்களின் நீளம் மொத்தம் 42,000 கிலோமீட்டர். ஆனால், தற்போது அனைத்து கால்வாய்களும் ஆறுகளும் சுருங்கி, தூர்ந்துபோய், புதர் மண்டிக் கிடக்கின்றன. பல பகுதிகளில் கால்வாய்கள் நிலத்துக்குப் பல அடி கீழே உள்ளன. இதன்காரணமாக ஆறுகள், கிளைக்கால்வாய்கள், பாசனக் கால்வாய்கள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்ல முடிவதில்லை. பல இடங்களில் கால்வாய்கள் முழுவதும் மறைந்துவிட்டன. 


மேலும் கல்லணைக்கு கீழே காவிரித் தண்ணீர் தேவைப்படும் ஏரிகள் தற்போதும் உள்ளன. ஆனால், இவை அனைத்தும் தூர்ந்துபோய் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளன. வரத்துக் கால்வாய்கள் முழுவதும் புதர்மண்டிக் கிடக்கின்றன. எனவே, வெள்ளக் காலத்தில்கூட இந்த ஏரிகள் நிறைவதில்லை. ஆனால் உலக வங்கி,ஆசிய வங்கி போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் காவிரி மேம்பாட்டுக்காக அரசு கடன் வாங்கியுள்ளது. இவ்வளவு கடன்வாங்கியும் காவிரிப் பாசனம் மேம்பாடு அடையவில்லைஎன்பதே உண்மை. ஆனால், பெரும் கடனாளியாகிக்கொண்டு இருக்கிறோம்.  டெல்டா பகுதியின் நீர்ப்பாசன முறை மிகத்தொன்மையானது. அத்தகைய நீர்ப்பாசன முறையை நவீனப்படுத்தி, தற்சமயம் டெல்டா பாசனத்துக்காக கர்நாடகத்தில் இருந்து 21 லட்சம் ஏக்கருக்கு கிட்டத்தட்ட 177.25டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் பெய்யும் மழையின் மூலமும் வேளாண்மைக்கு நீர் கிடைக்க வாய்ப்புண்டு. தற்போதுஒரு டி.எம்.சி. தண்ணீரில் 5,000 ஏக்கர் பயிர் செய்யப்படுகிறது. ஆனால், பாசன முறையை நவீனப்படுத்தி ஒரு டி.எம்.சி. தண்ணீரில் 10 ஆயிரம் ஏக்கர் வேளாண்மை செய்ய முடியும். 


உருக்குலைக்கப்படும் துணையாறுகள்


தமிழ்நாட்டில் காவிரிக்கு பவானி, அமராவதி, நொய்யல், கொடகனாறு ஆகிய நான்கு பெரிய துணையாறுகள் இருக்கின்றன. இவற்றோடு மிகப்பழமையான காளிங்கராயன் கால்வாயும் உள்ளது. இந்த ஐந்துமே ஆற்று மணல் இல்லாமல் பெருமளவு மாசுபட்டு மிகமோசமான நிலையில் உள்ளன. காவிரியில் தண்ணீர் வராத காலத்தில் இந்த துணையாறுகளைப் பார்த்தால், அவற்றின் உண்மை நிலை புரியும்.திருப்பூரில் பாயும் நொய்யல் ஆற்றுக்கு குறுக்கே ஒரத்துப்பாளையம் கிராமத்தில் கட்டியிருக்கும் ஒரத்துப்பாளையம் அணையை 1992இல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். உலகத்திலேயே ஒருமுறைகூட வேளாண் பாசனத்துக்குத் திறக்கப்படாத அணை ஓன்று இருக்கிறது என்றால், அது இதுதான். அணையிலோ ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும். ஆனால், சிவப்பு நிறத்திலிருக்கும். இந்த மாசடைந்த நீர்முழுவதும் திருப்பூர், அதைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 8 முதல் 10 கோடிலிட்டர் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலக்கப்படுகிறது. இந்தக் கழிவுநீரை முழுவதும் சுத்திகரித்துத்தான் வெளியேற்ற வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால், நடைமுறையில் சட்டம் பின்பற்றப்படுவது இல்லை. நிறைந்துவிட்ட ஒரத்துப்பாளையம் அணையை வேறுவழியில்லாமல் திறக்கும்போது, மாசடைந்த நீர் கடைசியாகக் காவிரியில் கலக்கிறது. இவ்வாறு காவிரியில் கலக்க வரும் நச்சுநீரை வழியில் ஆடு மாடுகள் குடித்து இறப்பதும் உண்டு.  


கரூர் மாவட்டத்தில் அமராவதி பாய்கிறது. ஆயிரக்கணக்கான சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நேரடியாக அமராவதி ஆற்றில் விடப்படுகிறது. அதுபோல ஈரோடு மாவட்டத்திலுள்ள காகித ஆலை, சர்க்கரை ஆலை, தோல் தொழிற்சாலைகளில் இருந்துவரும் கழிவுநீர் நேரடியாக பவானி ஆற்றில் கலக்கிறது.நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவுநீர் கொடகனாற்றில் விடப்படுகிறது.திருப்பூர் துணி ஏற்றுமதித் தொழில் மூலம் கிடைக்கும்ரூ. 28,000 முதல் 30 ஆயிரம் கோடி அந்நியச் செலா வணியை, வேலைவாய்ப்பைப் பற்றி மட்டும் பேசுவது சரியா?தொழில்வளம் வேண்டும். அதேநேரம் ஆறுகளும் வேண்டும். அதற்கான எந்தத் திட்டமிடுதலும் இல்லாததுபெரும் குறைபாடு. கண்மூடித்தனமாகச் செயல்படுத்தப்படும் தாராளமயமாக்கல், நிலைத்த வளர்ச்சி அடைவதற்கு பாதகமாகவே அமையும். 


கொல்லப்படும் காவிரியாறு


பல்வேறு விதமான கழிவுகள் காவிரியாற்றில் கலக்கப்படுவது, வரைமுறையற்று மணல் அள்ளுவது, ஆற்றின்கரைகளில் அதிகாரவர்க்கம் உருவாக்கும் ஆக்கிரமிப்புகள் ஆகியவை காவிரி ஆறு பாழடைந்துள்ளதற்கு மிகமுக்கியமான காரணம். இவற்றோடு மிக முக்கியமாகப் பிச்சாவரம் முதல்வேதாரண்யம்வரை சுமார் 150 கிலோ மீட்டருக்குகாவிரியிலிருந்து பிரிந்து கடலில் கலக்கும் நூற்றுக்கணக்கான கால்வாய்கள் வறண்டு தூர்ந்து மண்மேடாகியுள்ளன. இந்தக் கால்வாய்கள் மூலம் காவிரியின் நன்னீர்கடலில் கலப்பது முற்றிலும் நின்றுவிட்டதால் கடல்நீர் நேரடியாக உள்ளே வருகிறது. இதன் காரணமாக மண்வளமும் நிலத்தடி நீரும் மிக வேகமாக உப்பாக மாறிவிடுகிறது. கடந்த இருபது, முப்பது ஆண்டுகளாக நிலத்தடிநீர் ஏராளமாக உறிஞ்சப்பட்டு விட்டதால் கடல்நீர் கிட்டத்தட்ட 25 கிலோமீட்டர் உள்ளே வந்துவிட்டது. இதன் காரணமாக மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் கணக்கீட்டின்படி நாகை மாவட்டத்தில் நூறு சதவீதம், திருவாரூர் மாவட்டத்தில் 70 சதவீதம், தஞ்சையில் 40 சதவீதம் நிலத்தடிநீர் உப்பாக மாறிவிட்டது.


காணாமல் போகும் நிலங்கள்


காணாமல் போகும் நிலங்கள் காணாமல் போகும் நிலங்கள் ஆம் ஆண்டு தேசிய தொலைஉணர் மைய புள்ளி விவரங்களோடு (சூயவiடியேட சநஅடிவநளநளேiபே உநவேநச னயவய) ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நான்காயிரம் ஏக்கர் நிலம் கடலரிப்பால் கடலுக்குள்ளே சென்றுள்ளது. 500 ஏக்கர் கடற்பகுதி நிலமாக மாறியுள்ளது. தமிழ்நாட்டின் 1,076 கிலோ மீட்டர் நீளம் கொண்டகடற்கரைப் பகுதியில் புதிய துறைமுகம் கட்டுவது,அனல் மின்நிலையங்கள் தொடங்குவது, பொழுதுபோக்குக் கேளிக்கை பூங்காக்கள் கட்டுவது, பொங்கிவரும் கடலை கற்களைக் கொண்டு தடுப்பது போன்ற செயல்பாடுகள் காரணமாக ஓரிடத்தில் தடுக்கப்படும் கடல் நீர் வேறு வழியாக நிலத்துக்குள் ஊடுருவுகிறது.பிச்சாவரம், முத்துப்பேட்டையிலுள்ள பகுதிகளை செயற்கைக்கோள் படங்கள் மூலம் பார்க்கும்போது அலையாத்திக் காடுகள் அதிகமாக இருப்பதுபோல் தோன்றியது. ஆனால், உண்மை என்னவென்றால் அலையாத்திக் காடுகள் கடலின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. சாதாரணமாக அலையாத்திக் காடுகளின் தண்ணீர் நன்னீர்-உவர்நீர் கலப்பாக இருக்க வேண்டும். ஆனால், நன்னீர் வரத்து முழுவதும் தடைப்பட்டுவிட்டதால் கடல்நீர் மட்டுமே அங்கு மேலோங்கியுள்ளது. இதே நிலைமையை முத்துப்பேட்டை, வேதாரண்யம் ஏரி போன்ற பகுதியிலும் பார்க்கலாம். இவையனைத்தும் கடலின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டன. கடலுக்குள் போய்விடுமோ நாகை?


பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து டெல்டா பகுதியிலுள்ள மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. இப்படியே போனால் அடுத்த 40 ஆண்டுகளில் நாகப்பட்டினம் மாவட்டம் கடலுக்குள் போனால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இப்படிப்பட்ட சூழலில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பூமிக்கடியில் டெல்டா பகுதிகள் அமுங்கிவிடும். இதன்காரணமாக வேளாண்மை, வாழ்விடங்களுக்கு உள்ளே கடல் நுழையும். இதே நிலை நீடித்தால் காவிரிடெல்டா நிலப்பகுதி இப்போது இருக்கிற கடல்மட்ட அளவைவிட இன்னும் கீழே செல்வதற்கு வாய்ப்பிருக்கிறது. தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் காவிரி பாசனப் பகுதியை ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல’மாக அறிவிக்க வேண்டும். அதை மத்திய அரசுஅங்கீகரிக்க வேண்டும். உடனடியாக ஒரு உயர்மட்ட குழுஅமைத்து டெல்டா நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு செய்ய வேண்டும். மக்கள் இயக்கங்கள்,‘டெல்டாவை பாதுகாப்போம்’ என்ற இயக்கத்தை உருவாக்கித் தொடர்ந்து செயல்படுத்த முன்வரவேண்டும்.


;