செவ்வாய், செப்டம்பர் 21, 2021

tamilnadu

முகிலன் குறித்து தகவல் தருவோருக்கு சன்மானம்- சிபிசிஐடி போஸ்டர்


சென்னை:

சமூக ஆர்வலர் முகிலன் குறித்து தகவல் தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என்று சென்னை முழுவதும் சிபிசிஐடி காவல் துறையினர் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். இது முகிலன் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான முகிலன், கூடங்குளம் அணுஉலை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போன்ற மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆலைகளுக்கு எதிராக போராடியவர். கடந்த பிப்ரவரி மாதம் 15ந்தேதி சென்னைக்கு வந்த முகிலன் ஸ்டெர்லைட் தொடர்பான ஆவணங்களை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டார். 

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்ல ரயிலில் டிக்கெட் பதிவு செய்துள்ள நிலையில் எழும்பூர் ரயில் நிலையம் வந்த அவரை திடீரென காணவில்லை. அவர் குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்காததால், அவரை கண்டுபிடித்து தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், முகிலன் காணாமல்போன வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி டி.கே ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து,முகிலன் வழக்கை விசாரித்துவரும் சிபிசிஐடி காவல்துறை முகிலனைக் காணவில்லை என்று சென்னை முழுவதும் இன்று போஸ்டர் ஒட்டி உள்ளது. மேலும் அவர் குறித்த தகவல் தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


;