tamilnadu

img

பன்முக ஈடுபாட்டில் பரிணமித்த செயல்பாடு

தோழர் வெ.சுந்தரம் -சமூக அடிப்படையிலும், பொருளாதார நிலையிலும், கல்வி சார்ந்தும் ஒரு பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து, வங்கி ஊழியராகச் செயல்பட்டு இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய அங்கமாகிய ‘தீக்கதிர்’ குடும்பத்தில் ஒருவராக இயங்கிக்கொண்டிருப்பவர். ‘வி.எஸ்.’ என்று சக தோழர்களால் அன்புடன் குறிப்பிடப்படும் இவர், மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டிருந்த எளியதொரு குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இன்னொரு புனைபெயரும் உண்டு. தோழர் எழில்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 1949ம் ஆண்டில் பிறந்தவர் வி.எஸ். சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே கம்யூனிஸ்ட் இயக்கமும் விவசாயிகள் இயக்கமும் வலுவாகச் செயல்பட்ட மாவட்டங்களில் சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட முகவை மாவட்டமாகிய இராமநாதபுரம் மாவட்டமும் ஒன்று. ஒரே இயக்கமாக இருந்தஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்கள் பலர் இம்மாவட்டங்களில் உருவாகி வந்தவர்கள். 

அன்றைய ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் மாநிலச் செயலாளராகப் பணியாற்றிய மகத்தான தோழர் எம்.ஆர். வெங்கட்ராமன் சொந்த ஊர் மானாமதுரை. அவர் சென்னையில் படித்து வழக்கறிஞராகப் பணியாற்றி அன்றைய ஒன்றுபட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியில்சேர்ந்து அதன் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, மானாமதுரையில் தமது பூர்வீகக் குடும்பச் சொத்தாக இருந்த வீட்டை கட்சிக்கு எழுதிக் கொடுத்துவிட்டார். 1964ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஉருவாகி அக்கட்சியின் மாநிலச் செயலாளராக பொறுப்பேற்ற அவர், ஒன்றுபட்ட கட்சியின் மாவட்டக்குழுவிற்கு எனக் கொடுத்த தனது வீட்டை திரும்பக் கேட்க வேண்டாம்என்று முடிவெடுத்தார். அத்தகைய இயக்கப் பின்னணி கொண்ட பகுதியில் பிறந்து வளர்ந்த வெ.சுந்தரத்தின் வீட்டிற்கு அருகில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் செயல்பட்டு வந்த ஏஐடியுசிதொழிற்சங்க அலுவலகம் இருந்தது. பள்ளி மாணவராக இருந்த சுந்தரம் அடிக்கடி அங்கே செல்வார். அங்கு செயல்பட்டு வந்த முற்போக்கு வாலிபர் சங்க பாடசாலையில்  சோவியத் வெளியீடுகள், ஜெயகாந்தன் படைப்புகள், மு. வரதராசனார், தீபம் நா. பார்த்தசாரதி உள்ளிட்டோரின் எழுத்தாக்கங்களைப் படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. மானாமதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளை உற்றுக் கவனித்து வந்ததால் சிறுவயதிலேயே இவர்செங்கொடி இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டார். படித்த நூல்களிலிருந்து உள்வாங்கிய கருத்துகளையும் கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகளையும் உற்றுநோக்கியது இவருக்கு அரசியலைப் பற்றிய ஒரு புதிய வெளிச்சம் கிடைக்கச் செய்தது.

பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரியில் இணைந்து பட்டப்படிப்பில் ஈடுபட்டவர், கல்வித்திட்டப் பாடங்களை நன்கு பயின்றவராக மட்டுமல்லாமல், சமுதாய அக்கறையும் இடதுசாரிச் சிந்தனையும் கொண்ட மாணவராகவும் பரிணமித்தார். அந்த பின்னணியோடு 1970களின் தொடக்கத்தில் தபால் தந்தி துறையில் முதலில் பணிக்கு சேர்ந்தவர், 1972-ல் கனரா வங்கி ஊழியரானார். வங்கியில் பணியாற்றியபோது, சக ஊழியர்களின் நலன்களுக்காகத் தன்னலமின்றிப் போராடுகிறவராக, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இன்றைய இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (பெஃபி) உருவானதில் முனைப்புடன் பங்களித்தார். பின்னாளில் சங்கம் ஒப்படைத்த மாநில, அகில இந்தியபொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.வங்கி அரங்கப் பணிகளோடு நேரடி கட்சிப் பணிகளிலும் முழுமையாக இறங்கிச் செயல்பட்டார் தோழர் வி.எஸ். கோவில்பட்டி வங்கிக் கிளையில் பணியாற்றியபோது தோழர்கள் பால்வண்ணம், ஆர்.எஸ். மணி, ஆர். ஜவகர் ஆகியோருடன் அறிமுகம் கிடைத்தது. அந்த நாட்களில் கோவில்பட்டி நகரம் இளைஞர்களிடையே அரசியல், சமூகம், இலக்கியம் குறித்து விரிவான விவாதங்களும் கருத்துச் சண்டைகளும் நடந்த ஒரு ஆக்கப்பூர்வமான தளமாக இருந்தது. அறிவார்ந்த அந்த வாத-எதிர்வாதச் சண்டைகளில் சுந்தரமும் பங்கேற்றார்.

சமுதாய அக்கறையோடு பேனாவைக் கையில் எடுத்தஎழுத்தாளர்களை இணைத்து ‘முற்போக்கு இலக்கிய வாசகர் குழு’ உருவாக்கப்பட்டது. சுந்தரம் அதன் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். 1973ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் அவருக்குத் தொடர்பும் நெருக்கமும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 1975ல் மானாமதுரைக்கு மாறுதலானபோது கட்சி உறுப்பினரானார். கட்சியின் மதுரை- இராமநாதபுரம் மாவட்டக் குழுக்கள் ஒரே குழுவாக இருந்த அந்தக் காலகட்டத்தில் கலை இலக்கிய ஈடுபாட்டுடன் அதற்கான அமைப்பில் செயல்படத் தொடங்கினார். இன்றைய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) அன்றுதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமாக (தமுஎச)உருவானபோது, அதன் மானாமதுரை கிளை உருவாக்கப்பட்டது. அந்தக் கிளையின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமுஎச முதல் மாநில மாநாட்டில் ஒரு பிரதிநிதியாகப் பங்கேற்று, பின்னர் மூன்றாவது மாநில மாநாட்டில் மாநிலக்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

1975ல் அவசர நிலை ஆட்சிக் காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்த அரசுஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் அலுவலர்கள் உள்ளிட்டோர், அவர்களது பாதுகாப்பு கருதி, புனைபெயர்களிலேயே கட்சிக்குள் குறிப்பிடப்பட்டார்கள். தாங்களாகப் புனை பெயர் வைத்துக்கொண்டவர்களும் உண்டு. தலைவர்களால் வேறு பெயர்களில் அழைக்கப்பட்டவர்களும் உண்டு. தோழர் சுந்தரத்துக்கு தோழர் எஸ்.ஏ. பெருமாள் சூட்டிய புனைப்பெயர்தான் ‘எழில்’. 1977ல் அவசர நிலை ஆட்சி முடிவுக்கு வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முகவை மாவட்டக்குழு உருவாக்கப்பட்டு அதன் செயலாளராக தோழர் எஸ்.ஏ.பெருமாள் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருடன்ஏற்பட்ட தொடர்பினால் புத்தகங்கள் படிப்பது, இயக்கங்களில் பங்கேற்பது என தோழர் வி.எஸ்.சின் செயல்பாடுகள் விரிவடைந்தன. அதற்கு எஸ்.ஏ.பி. வழிகாட்டினார். 1980ல்கட்சியின் முகவை மாவட்டக்குழுவில்  இணைக்கப்பட்டு ஆர்வத்தோடு கட்சி வேலைகளில் ஈடுபட்ட நினைவுகளைப் பசுமையாக நினைவுகூர்கிறார் முகவை எழில். அன்றைய முகவை மாவட்டத்தில் கட்சித் தோழர்களுக்கு அரசியல் வகுப்புகளை எடுக்கத்தொடங்கினார். பின்னாளில் கட்சியின் மாநில கல்விக்குழுவில் இணைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களிலும், வெகுமக்கள் அரங்கங்களிலும் அரசியல் வகுப்புகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கி ஊழியராக பணியாற்றிக்கொண்டே அரசியல் கல்வி ஆசிரியராக அனைத்து மாவட்டங்களுக்கும் சென்றார். மார்க்சியத் தத்துவம், கட்சித் திட்டம் உள்ளிட்ட பாடப்பொருள்களை எளிமையாகவும் சுவைபடவும் எடுத்துரைக்கும் திறன் கொண்டவர். “அகில இந்திய கட்சிப் பள்ளிகளில் இரண்டுமுறை பங்கேற்றிருக்கிறேன். நம்முடைய மகத்தான தலைவர்கள் இஎம்எஸ், ஹர்கிஷன் சிங் சுர்ஜித் போன்றவர்களின் வகுப்புகளை கேட்கிற அரிய வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன,” என்று அடக்கத்தோடு பெருமிதத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

அறிவியல் இயக்கம், அறிவொளி இயக்கம் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான பன்முகச் செயல்பாடுகளிலும் தன்னைஇணைத்துக் கொண்டவரான வி.எஸ்., வங்கிப் பணியில்இன்னும் பத்தாண்டுகள் தொடர வாய்ப்பிருந்த நிலையிலும்தன்னுடைய 50வது வயதில் வேலையிலிருந்து தன்விருப்பஓய்வு பெற்று, 2001ம் ஆண்டு முதல் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றி வருகிறார். கட்சியின் மதுரை மாவட்டக்குழு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது புறநகர் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றார். மாநிலக்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டு, கட்சியின் மாநில தணிக்கைக் குழுவிலும் பணியாற்றினார். கட்சியின் வேண்டுகோளை ஏற்று, மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு ‘தீக்கதிர்’ மதுரைப் பதிப்புப் பொது மேலாளராகப் பணியாற்றினார். உடல் நலம்பாதிக்கப்பட்டபோது தாமாகவே முன்வந்து தன்னை மாநிலக்குழுவிலிருந்து விடுவிக்கக் கேட்டுக்கொண்டார். இப்போதும் ‘தீக்கதிர்’ நிர்வாக ஆலோசகராக தினமும் அலுவலகம் வருகிறார். கட்சி நடத்திடும் இலக்கிய மாத இதழான ‘செம்மலர்’ ஆசிரியர் குழுவிலும் செயல்பட்டு வருகிறார்.கட்சி தனக்களிக்கும் பணிகளை ஆர்வத்தோடும் அக்கறையோடும் செய்து பன்முகச் செயல்பாட்டில் முன்னணியில் நிற்பவர், தன்னடக்கத்தின் உருவமாகவும் இருப்பார். அதே நேரத்தில் எந்தவொரு பிரச்சனையிலும், ஆழ்ந்த அரசியல் பார்வையுடன், தன்னுடைய கருத்தை உரிய அமைப்பில் அழுத்தமாக பதிவு செய்யத் தவறுவதில்லை.மாணவர்கள், இளைஞர்கள், வயதில் மூத்தவர்கள் எனஅனைத்துத் தரப்புத் தோழர்களுடனும் கலந்து கரைந்துபோவது இவரது ஒரு சிறப்புப் பண்பு. கட்சி அமைப்பை ஒருங்கிணைத்துப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதிலும், அவ்வப்போது எழக்கூடிய கடினமான சூழ்நிலைமைகளைப் பொறுமையாகக் கையாளுவதிலும் வல்லவர். 

மதுரை புறநகர் மாவட்டச்செயலாளராக பணியாற்றியபோது, தலித் மக்களின் வாய்ப்பைப் பறிக்கும் வகையில்தேர்தல் நடத்தப்படாமலிருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் ஊராட்சிகளுக்குத் தேர்தல் நடத்துவதற்கான போராட்டத்திலும், உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் தகர்ப்புப் போராட்டத்திலும் தன் முன்னணிப் பங்களிப்பைச் செலுத்தியுள்ளார்.கட்சியிலும், ‘தீக்கதிர்’ அலுவலகத்திலும் ஊழியராகத் தொடர்ந்து இயங்கி வரும் தோழர் வி.எஸ்., முழுநேர ஊழியர்களுக்கான ஊதியத்தைப் பெற்றுக்கொள்ளாமல், மிகுந்த அர்ப்பணிப்புடன் இயக்கப்பணியாற்றி வருகிறார். இவரது துணைவியார் கனுகாந்தி, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகள் விஜயராணி திருமணமாகி, அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார்.இளமைப் பருவத்தில் தொடங்கி இன்றளவும் அர்ப்பணிப்போடு கட்சிப் பணியாற்றி வருகிற தோழர் சுந்தரம் தற்போதுதமது 68 வயதில் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் சாத்தியமான அளவுக்கு உணர்வுப்பூர்வமாக இயக்கஈடுபாட்டோடு செயல்படுகிறார். கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக கம்யூனிஸ்ட் ஊழியருக்கான ஒரு எடுத்துக்காட்டாக தோழர் வி.எஸ். ஆற்றி வரும் இயக்கப் பணி பாராட்டக்குரியது - பின்பற்றத்தக்கது. 

இந்தக் கட்டுரை களப்பணியில் 

கம்யூனிஸ்ட்டுகள் பகுதியில் 2017ல் வெளியானது