tamilnadu

img

உடையாளூரில் உள்ளது ராஜராஜ சோழன் சமாதியா? தொல்லியல் துறையினர் ஆய்வு

தஞ்சாவூர், ஏப்.23- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் இருப்பது மாமன்னன் ராஜராஜசோழன் சமாதியா என தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வுப் பணி மேற்கொண்டனர். கி.பி. 11 ஆம் நுாற்றாண்டில் பழையாறை சோழர்களின் தலைநகரமாக இருந்து வந்துள்ளது. அப்போது மாறவர்மன் சுந்தரபாண்டியன், போர் தொடுத்து பழையாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை அழித்துள்ளான். அதில் எஞ்சிய இடங்களில் ஒன்றான உடையாளூர் பால்குளத்தம் மான் கோவிலில் இன்றும் ராஜாராஜன் நிறுவிய கல்வெட்டு ஒன்று ஆதாரமாக உள்ளது. பின்னர் சோழர்கள் தங்களுடைய ஆட்சியை பழையாறையிலிருந்து திருச்சியை அடுத்த உறையூருக்கு தலைநகரை மாற்றினார். பழையாறை, உடையாளூர், பட்டீஸ்வரம், சோழன்மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் சோழர்கள் வாழ்ந்து வந்த இடமாக வரலாற்று குறிப்புகள் உள்ளன. மேலும் தஞ்சையை ஆண்டராஜராஜன் தனது வாழ்நாளின் இறுதியை உடையாளூர் பகுதியில் கழித்த போது அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு சான்றாக அக்கிராமத்தில் ராஜராஜனின் சமாதி இருப்பதாகவும் கல்வெட்டு ஆய்வாளர்களும், கிராம மக்களும் கடந்த சில ஆண்டுகளாக கூறி வருகின்றனர். சமாதி இருப்பதாக கூறப்படும் ஓட்டத்தோப்பு என்ற இடத்தில் புதையுண்டு மூன்றடி வெளியே தெரியும் சிவலிங்கம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் ஆண்டு தோறும்ராஜராஜனின் சதய விழாவின் போது உடையாளூர் கிராம மக்கள்பூஜைகள் செய்து வருகின்றனர். மேலும் சமாதி இருப்பதாக கூறப் படும் இடத்தினை அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.


இதற்கிடையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ராஜராஜனின் சமாதி இருப்பதாக கூறப்படும் உடையாளூரில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தும்,அரசு சார்பில் அங்கு மணிமண்டபமும், இந்திய பெருங்கடல் அல்லது வங்காள விரிகுடா ஆகிய இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் ராஜராஜனின் சிலையையும் அமைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த ஏப்.11ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் உடையாளூரில் ராஜராஜன் சமாதி இருப்பது உண் மையா என அகழ்வாராய்ச்சி செய்துஅதன் அறிக்கையை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்என உத்தரவிட்டனர். இதையடுத்து திங்கள்கிழமை தமிழக தொல்லியல் துறை துணைஇயக்குநர் சிவானந்தம், தொல்லியல் அலுவலர்கள் தங்கதுரை, பாஸ்கர், கல்வெட்டு ஆய்வாளர் கள், பேராசிரியர்கள், ஆகியோர் கொண்ட குழுவினர் சமாதி இருப்பதாக கூறப்படும் பகுதியில் 10 ஏக்கரில் ஆய்வுப் பணியை தொடங்கினர். அப்போது ஆளில்லா குட்டி விமானத்தில் நவீன கேமராக்கள் பொருத்தி பூமியின் மேற்பரப்பு மற்றும் பூமிக்கடியில் இரண்டு மீட்டர் ஆழத்தில் நீரோட்டம், பழமையான கட்டடங்களின் தன்மை, தற்போதைய கட்டடங்கள் ஆகியவற்றை படம் பிடித்தும், அதன் கோணங்களையும் கணினி மூலம்பதிவு செய்தனர். மேலும் உடையாளூரில் பால்குளத்து அம்மன் கோவில், கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வு தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது. இதன் ஆய்வறிக்கை தமிழக தொல்லியல் துறை ஆணையத்துக்கு அனுப்பி பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என தொல்லியல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

;