tamilnadu

img

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தஞ்சை பூமி ரசாயன மண்டலமாகிவிடும் மதுக்கூர் ராமலிங்கம் எச்சரிக்கை

மன்னார்குடி, ஏப்.14-ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமத்திற்கு டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மோடிஅரசு அனுமதி கொடுத்துள்ளது. தப்பித் தவறி மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒன்றுபட்ட தஞ்சைமாவட்டம் ரசாயன மண்டலமாக்கப் பட்டு மக்கள் பிழைப்பு தேடி வேறுமாவட்டங்களுக்கு புலம் பெயர்ந்து செல்லக் கூடிய அவலநிலை ஏற்படும்என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் ஆசிரியருமான மதுக்கூர் ராமலிங்கம் எச்சரித்தார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தஞ்சை தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை ஆதரித்து மதுக்கூர் ராமலிங்கம் ஞாயிறு அன்று மன்னார்குடி பந்தலடி பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். கூட்டணி கட்சியின் மன்னார்குடி நகரதேர்தல் பணிக்குழுத் தலைவர் வீரா.கணேசன் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மேலும் அவர் பேசியதாவது:டெல்டா மாவட்டங்களான இப்பகுதி முழுவதையும் ரசாயனமண்டலமாக பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக மோடியின் பாஜகவினர்மாற்ற இருக்கிறார்கள். தஞ்சை டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்போம் என்று திமுக,காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இயக்கங்களும் பங்கேற்றிருக்கும் மதச்சார்பற்றமுற்போக்குக் கூட்டணி தெளிவாககூறியிருக்கிறோம்.


விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக் கும் நிலத்திற்கும் இடையில் இருக்கும் உறவு உயிருக்கும் உடலுக்கும் இடையேஇருக்கும் உறவை போன்றது.எட்டு வழிச்சாலையை ரத்து செய்து அந்த நிலத்தை மீண்டும் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் இப்படி கூறியவுடன் விவசாயிகளெல்லாம் ஓடிச் சென்று தன்நிலத்தில் நடப்பட்டிருந்த அரசு அளவைக் கல்லை பிடுங்கி எறிந்தனர். அவ்வாறு பிடுங்கி எறிந்த ஒரு பெண் மணியிடம் கேட்ட போது இப்போது இதை பிடுங்கி எறிகிறேன். நாளை இதற்கு காரணமான மோடியையும், எடப்பாடியையும் வேறோடு ஆட்சி அதிகாரத்திலிருந்து பிடுங்கி எறிவோம் என்றார்.நிலத்திற்கும், விவசாயிகளுக்கும் இடையே உள்ள இந்த உணர்வைதான் பாஜக, அதிமுக ஆட்சியாளர்கள் வஞ்சித்தார்கள். காவிரி பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று அடாவடியாக மறுத்த அரசு தான் மோடி அரசு.நமது பகுதியை தரிசாக மாற்றுவதற்கு மீத்தேன், ஹைட்ரோ கார்பன்திட்டங்களை கொண்டு வந்த அரசுதான் மோடி அரசு. தூத்துக்குடியில் புற்றுநோய் உருவாக்கும் ஸ்டெர் லைட் ஆலையை வேண்டாம் என்ற காரணத்திற்காக 13 உயிர்களை பறித்தகொலைகார அரசு தான் மோடி அரசும், எடப்பாடி அரசும். இவர்கள்கூட்டணி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் எதிரான கூட்டணியாகும்.


மரியாதைக்குரிய மன்னை நாராயணசாமி போன்றவர்கள் சுயமரியாதை இயக்கத்தை நடத்திய மண், மன்னார்குடி மண்ணாகும். தமிழ்நாட்டின் கண்ணியத்தையும், சுயமரியாதையையும் காற்றில் பறக்கவிடுபவர்களாக எடப்பாடி அரசு மாறிவிட்டது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைசிறு, குறு தொழில்களை நாசமாக்கியது. வங்கிகளின் வாசலில் காக்க வைத்து நம்மையெல்லாம் அலையவிட்ட 500, 1000 ரூபாய் பண மதிப்பிழப்பு பாஜகவினரின் சுயநலனுக்காக கொண்டு வரப்பட்ட திட்டமாகும். அடுத்த தலைமுறை வாழ வேண்டும். கல்விக் கடன் ரத்து செய்யப்பட வேண்டும். நீட் தேர்வு ரத்தாக வேண்டும்என்றால் மக்கள் அனைவரும் மதச்சார் பற்ற கூட்டணி வேட்பாளர்களைவெற்றி பெறச் செய்ய வேண்டும். மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கும், வணிகர்களுக்கும், பெண்களுக்கும் மற்றும் எல்லா தரப்பினருக்கும் எதிரான மோடி அரசை வீழ்த்திமத்தியில், மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு மதுக்கூர் ராமலிங்கம் உரையாற்றினார். பிரச்சாரத்தில் நகர தேர்தல் பணிக்குழுவின் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் ஆர்.பி.சித்தார்த்தன், எஸ்.ஆறுமுகம், அறிவுக்கொடி, எழிலரசன், சன்.சரவணன், வி.கலைச்செல் வன், என்.மகேந்திரன், கோவி.மீனாட்சிசுந்தரம், ஆர்.கனகவேல், எஸ்.செல்வராஜ், தா.முருகையன், முத்துமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;