tamilnadu

img

தடை தகர்த்து தஞ்சையில் விவசாயிகள் எழுச்சி....

தஞ்சாவூர்:
காவல்துறையின் தடைகள், கெடுபிடிகளையும் மீறி, விவசாயிகள் விரோத ஆட்சிக்கு எதிராக,தஞ்சையில் மாநிலம் தழுவிய உழவர்கள் பேரணி செவ்வாயன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது. 

மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் விரோதச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; மின்சாரச் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்; மாநில அதிமுக அரசு மக்கள், விவசாயிகள் விரோதசட்டங்களை ஆதரிக்கக் கூடாது என வலியுறுத்தியும், தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தஞ்சாவூர் திலகர் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

அகில இந்திய விவசாயிகள் போராட்டஒருங்கிணைப்புக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், கூட்டத்திற்கு தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் டாக்டர் வே.துரைமாணிக்கம், வி.சுப்பிரமணியன், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மு.சேரன், அகில இந்திய விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சந்திரபோஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பி.செந்தில்குமார், வீரமோகன், சமவெளி விவசாயிகள் சங்கத்தின் சு.பழநிராஜன், தாளாண்மை உழவர்இயக்கத்தின் கோ.திருநாவுக்கரசு, ஜனநாயக விவசாயிகள் சங்கத்தின் ஆர்.அருணாசலம், தமிழர் தேசிய முன்னணியின் சி.முருகேசன், அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் டி.கண்ணையன், திண்டுக்கல் மாவட்டவிவசாயிகள் சங்கத்தின் எஸ்.நிக்கோலஸ், தமிழ்நாடு, பாண்டிச்சேரி கரும்பு உற்பத்தியாளர் கூட்டமைப்பின் கார்மாங்குடி எஸ்.வெங்கடேசன், இராமநாதபுரம் மாவட்ட விவசாய பெண்கள் அமைப்பின் நா.ராமலெட்சுமி, தமிழக நில உரிமை கூட்டமைப்பின் சி.நிக்கோலஸ், அரச்சலூர் செல்வம், அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை விவசாயிகள் சங்கத்தின் பி.கோவிந்தராஜூ, விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் அரியந்த்  டி.கண்ணன், மக்கள் அதிகாரம் வெற்றிவேல் செழியன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் இ.சரவண முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், முன்னாள் எம்எல்ஏ எஸ்.குணசேகரன், பி.எஸ்.மாசிலாமணி, அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் சிம்சன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் டாக்டர்ஆ.ரங்கசாமி, வாழ்க விவசாயிகள் சங்கத்தின் பி.எஸ்.காளிராஜ், காவிரி டெல்டா பா.வி.ச கூட்டமைப்பின் கே.வி.இளங்கீரன், விவசாயி கள் பாதுகாப்பு சங்கத்தின் அக்ரி கா.பசுமை வளவன், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் கி.வே.பொன்னையன், தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழுவின் ஷீலு, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் பொழிலன், மக்கள் அதிகாரம் காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

திமுக மத்திய மாவட்டச் செயலாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன், மதிமுக விவசாய அணிச் செயலாளர் ஆடுதுறை முருகன், குடந்தை அரசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.லாசர், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, மக்கள் அதிகாரம் கோவனின்எழுச்சிப் பாடல்கள், தியாகி என்.வி.கலைக்குழு ரமேஷ் பாடல்கள், கோவை நிமிர்வு கலையகம், உலகப் பொது இசைப்பறை குழுவின் தப்பாட்டம் ஆகியவை நடைபெற்றன. மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டனர். பேரணிக்கு அனுமதி இல்லாததால் நடைபெறவில்லை. எனினும் சாரை சாரையாக விவசாயிகள், தூறும் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டனர். 

பெ.சண்முகம் கடும் கண்டனம்

முன்னதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கபொதுச் செயலாளர் பெ. சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை (டிச.29) பேரணி, பொதுக்கூட்டம் நடத்துவதற்காகக் காவல் துறையிடம் முறையாக அனுமதி கோரி கடிதம் அளித்தோம். ஆனால், இழுத்தடிப்பு செய்து பொதுக்கூட்டத்துக்கு மட்டும் அனுமதி அளித்தனர். இப்பொதுக் கூட்டத்துக்கு வெளி மாவட்டங்களிலிருந்து யாரும் வரக்கூடாது எனக் கூறிவிட்டனர்.இப்பொதுக் கூட்டத்தில் பங்கேற்க இருந்த தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பலரை காவல் துறையினர் வீட்டுக் காவலில் வைத்துவிட்டனர். மதுரை, கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு வேனில்வந்த விவசாயிகளைக் கைது செய்துள்ளனர். இப்பொதுக் கூட்டத்தைச் சீர்குலைப்பதற்காகத் தமிழக அரசும், காவல் துறையும் அடக்குமுறையில் ஈடுபட்டது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.வேளாண் சட்டங்களை ஆதரித்து ஆளுங்கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்களுக்குள்ள உரிமை, அச்சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கும் இருக்கிறது. போராடுவது அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றமும் கூறியிருக்கிறது.

இந்நிலையில், விவசாயிகள் பெருமளவில் கூடுவதை விடக்கூடாது என திட்டமிட்டு தமிழக அரசின் வழிகாட்டுதலுடன் காவல் துறைச் செயல்படுவது சட்ட விரோதமானது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டால் மட்டுமே போராட்டம் முடிவுக்கு வரும்.இல்லாவிட்டால் போராட்டம் நீடிக்கும். இதேபோல, தமிழ்நாட்டிலும் தொடர்ச்சியாகப் போராட்டம் நடைபெறும். போராட்டத்துக்குத் தடை விதித்தாலும், தடையை மீறி நடத்துவோம்.இப்பிரச்சனை வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும். பாஜகவுடன் அணி சேர்ந்துள்ள அதிமுக தனக்குத் தானே மண்ணைஅள்ளிப் போட்டுக் கொள்ளப் போகிறது.இவ்வாறு அவர் கூறினார்.