tamilnadu

img

அதிகாரிகளின் அலட்சியத்தால் நெற்பயிர் மூழ்கி அழுகும் அபாயம்

கும்பகோணம், டிச.1-  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. பருவமழை தொடங்கிய வேகத்தில் கும்பகோணம்  பகுதியில் லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக லேசாக பெய்து வந்த மழை கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் பகுதியில் இடைவிடாது விடிய, விடிய கனமழை பெய்தது. இந்நிலையில் பாபநாசம் தாலுகா மெலட்டூர், திருவிடைமருதூர் தாலுகா சோழ வளாகம் வேப்பத்தூர் திருவிச நல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் தொகு ப்பு வீடுகள் மழையினால் இடிந்து விழுந்தன. இதில் முதியவர் ஒருவர் பலியானார்.  மேலும் இது டெல்டா மாவட்டங் களில் ஒரு பகுதியான கும்பகோணம் பகுதியில் சம்பா தாளடி நெல் சாகுபடி செய்யும் பருவம் ஆகும். வடகிழக்கு பருவமழை தொடங்கிய போது மிதமாக பெய்து வந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வந்தனர். மிதமான மழை பயிர் வளர்ச்சிக்கு கை கொடுத்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் தற்போது பெய்த கன மழையால் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. சுவாமிமலை நாச்சியார்கோவில் கொத்தங்குடி, மெலட்டூர் கபிஸ்தலம் ஆகிய பகுதிகளில்  நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. சில இடங்களில் நெற்பயிர்கள் சாய்ந்து காணப்பட்டன. வயல்களில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற விவசாயிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மழை நீடிக்கும் பட்சத்தில் பயிர்கள் தண்ணீரில் தேங்கி அழுகும் நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் செந்தில்குமார், செயலாளர் வி.கண் ணன் கூறுகையில், தஞ்சை மாவட்டத் தில் பல கிராமங்களில் கடந்த மாதம் பெய்த பருவமழையால் ஏராளமா னோர் நெல் பயிரிட்டு வந்தனர். பொதுப் பணித்துறை பாசன வாய்க்கால்களை உரிய நேரத்தில் தூர்வாராமல் உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பல கோரிக்கை போராட்டம் நடத்தியது. தற்போது பெய்த கனமழையில் பயிர்கள் மூழ்கி கிடக்கின்றன. இந்நிலை நீடித்தால் இரண்டு மூன்று நாட்களில் பயிர் அழுகி விவசாயிகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தும். ஆகையால் போர்க்கால அடிப்படையில் பொதுப்பணித்துறை மற்றும் வேளாண் அலுவலர்கள், மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று உடனடியாக வாய்க்கால்களை தூர்வாரி தண்ணீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெற் பயிர் மூழ்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.