சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரபேல் விமான ஒப்பந்தத்தில், மிகப்பெரிய அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகவும், இந்த ஊழலை முன்னின்று நடத்தியதே பிரதமர் மோடிதான் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்
காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். அப்போது, ‘சவுகிதார் சோர் ஹை’ - அதாவது, ‘காவல் காரரே திருடன் ஆனார்...’ என்ற முழக்கத்தை ராகுல் காந்தி முன்வைத்தார். இந்த முழக்கம் நாடு முழுவதும் பிரபலமானது.
இதனிடையே ‘மைன் பி சவுகிதார்’... ‘நானும் காவலாளிதான்’ என்ற டுவிட்டர் ஹேஷ்டாக்கை, கடந்த வாரம் மோடி கையிலெடுத்தார். ஆனால், அது அவருக்கு எதிராகவே திரும்பியது. மோடி காவல்காரர்தான்... நாட்டை கொள்ளையடித்து விட்டுவெளிநாட்டுக்கு தப்பிய பெரும் பணக்காரர்களுக் கும், இந்திய வங்கிகளைச் சூறையாடிய பெரு முதலாளிகளுக்கும் மோடி காவல் காரர்தான் என்று எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்தன. இந்நிலையில், ராகுல் காந்தி முன்வைத்த, ‘சவுகிதார் சோர் ஹை... காவல் காரரே திருடன் ஆனார்’ என்ற முழக்கம், தற்போது நடை பெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. அது நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டத்தின் போது, மைதானத்தில் கூடியிருந்த கிரிக்கெட் ரசிகர்கள் ‘சவுக்கிதார் சோர் ஹை’ என்று மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இந்த முழக்கம் மைதானம் முழுவதுமே எதிரொலித்துள்ளது.