tamilnadu

வறண்டு கிடக்கும் கொரட்டூர் ஏரி - ஆழப்படுத்தி தூர்வாரப்படுமா?

அம்பத்தூர், ஏப். 19- தமிழகத்தின் தலைநகரான சென்னை கொரட்டூரில் 850 ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ளது கொரட்டூர் ஏரி. தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய ஏரிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த ஏரியை பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது.இந்த ஏரியை சுற்றி அக்கிரகாரம், எல்லையம்மன் நகர், சராதாநகர், கண்டிகை, லேக்வியூ கார்டன், டி.வி.எஸ் நகர், சிவலிங்கபுரம், சுப்புலட்சுமி நகர், அன்னை நகர், பாலாஜி நகர், சீனிவாசபுரம், காந்தி நகர், ராஜிவ் நகர், சிவகாமி நகர், கோபாலகிருஷ்ணன் நகர், திருமலை நகர், கள்ளிக்குப்பம், முத்தமிழ் நகர், கருக்கு, ஞானமூர்த்தி நகர், மேனாம்பேடு, மாதானங் குப்பம், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேற்கண்ட பகுதி மக்களுக்கும், அருகிலுள்ள வில்லிவாக்கம் உள்ளிட்ட சென்னை நகர மக்களுக்கும் குடிநீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்கியது.சில வருடங்களுக்கு முன்பு இந்த ஏரியின் பெரும்பகுதி தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு ஏரியின் பரப்பளவு சுருங்கியது. மேலும் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட ரசாயனத் தொழிற் சாலைகள் மற்றும் ஏற்றுமதி ஆடை நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவு நீர் மழை நீர் கால்வாய் வழியாக ஏரியில் வந்து கலக்கிறது. இதனால் குடி நீருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.


இதுகுறித்து அப்பகுதி மக்கள் அரும்பாக் கத்தில் உள்ள தென்மண்டலம் பசுமை தீர்ப்பாயத் தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கொரட்டூர் ஏரியில் கழிவு நீரை விட தடை உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஏரிக்கு வந்து ஆய்வு செய்து, ஏரிக்கு செல்லும் மழை நீர்க் கால்வாயை அடைத்தனர். ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஏரியில் கழிவு நீர் கலந்து மாசடைந்து வருகிறது. மேலும் அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் 1,000கும் அதிகமான தொழிற்சாலைகள், ஏற்றுமதி ஆடை நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்களிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவு நீர் ஏரிக்கு செல்லும் மழை நீர் கால்வாயில் விடப்பட்டதால் ஏரியில் இந்த ரசாயன கழிவு நீரும் கலந்து ஏரி மேலும் மாசடைந்தது.அதேபோல் அம்பத்தூர், பட்டரைவாக்கம், மேனாம்பேடு, கொரட்டூர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளின் கழிவு நீரும் இந்த ஏரியில் விடப்படுகிறது. இதனால் இந்த ஏரி தண்ணீர் குடிநீருக்கு பயன்படாமல் போனதோடு, அருகில் உள்ள வீடுகளின் கிணற்று நீரும் மாசடைந்து குடிப்பதற்கு வழியில்லாமல் போனது. மேலும் இந்த நீரை பயன்படுத்தினால் தோல் வியாதி வருவதாகவும், உடம்பில் அரிப்பு ஏற்படுவதாகவும், குடிநீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


ஏரியில் கலக்கும் ரசாயன கழிவுகளால் மீன்கள் செத்து மிதக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. அதேபோல் ஏரியை சுற்றி சுமார் 150 ஏக்கர் அளவிற்கான ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏரியின் ஆழம் சுமார் 2 அடிக்கும் குறைவாகவே உள்ளது. மேலும் ஒரே இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்காமல் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் இருக்கும் தண்ணீரும் விரைவில் ஆவியாகி விடுகிறது. எனவே, “நீர் இன்றி அமையாது உலகு” என்ற திருவள்ளுவரின் கூற்றை மனதில் நிறுத்தி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், பொதுப் பணித் துறையும் உடனடியாக தலையிட்டு ஏரியை தூர் வாரி, மையப்பதியை ஆழப்படுத்தி கரையை உயர்த்த வேண்டும். ஏரியில் கலக்கப்படும் கழிவு நீர், தொழிற்சாலை ரசாயன கழிவு நீரை தடுத்து நிறுத்தி, ஏரி ஆக்கிரமிப்பை அப்புறப் படுத்தி ஏரியை பாதுகாத்து குடிநீருக்கு பயன் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பொழுதே ஏரியை தூர்வாரி, ஆழப்படுத்தி, பாதுகாத்து குடிநீருக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுத்தால்தான் வரும் காலங்களில் கொரட்டூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குடி தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

;