பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது ஒன்றிய அரசு தடை விதித்திருப்பது பிரச்சனையை கையாள்வதற்கான வழியல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் அரசியல் தலைமைக்குழு செப்டம்பர் 28 புதனன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) என்பது தீவிரவாத கருத்துக்களைக் கொண்டிருக்கிற ஒரு அமைப்பு ஆகும். இது தனது எதிரிகள் என்று கருதுபவர்கள் மீது வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய தீவிரவாத கருத்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது; மேற்கண்ட பிஎப்ஐ அமைப்பின் வன்முறை நடவடிக்கைகளை எப்போதுமே கண்டித்து வந்திருக்கிறது.
எனினும் பிஎப்ஐ அமைப்பை ஒரு சட்டவிரோத சங்கம் என்று சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (உபா) தடை செய்து அறிவிக்கை வெளியிட்டிருப்பது, இப்பிரச்சனையை கையாள்வதற்கான வழி அல்ல. ஆர்எஸ்எஸ் மற்றும் மாவோயிஸ்டுகள் போன்ற அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடைகள் பெரிய அளவிற்கு பலன் தரவில்லை என்பதையே கடந்த கால அனுபவங்கள் காட்டுகின்றன. பிஎப்ஐ அமைப்பு சட்டவிரோத அல்லது வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அதற்கு எதிராக நடைமுறையில் உள்ள சட்டங்களின் படியே உறுதியான நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அந்த அமைப்பின் பிளவுவாத மற்றும் பிரிவினைவாத சித்தாந்தம் மக்களிடையே அவசியம் அம்பலப்படுத்த வேண்டும்; அரசியல் ரீதியாக முறியடிக்கப்பட வேண்டும்.
பிஎப்ஐ மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய இரு அமைப்புகளும் கேரளாவிலும் கடலோர கர்நாடகாவிலும் பதற்றமான சூழலை உருவாக்கி மத ரீதியாக அணிதிரட்டலை மேற்கொள்ளும் பொருட்டு கொலைகள் மற்றும் பழிவாங்கும் கொலைகள் என பாதகச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இவை மட்டுமல்ல, சனாதன் சன்ஸ்தா மற்றும் இந்து ஜனஜக்ருதி சமிதி போன்ற தீவிரவாத அமைப்புகளும், இவர்களது கையாட்களும் பிரபலமான மதச்சார்பற்ற எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்களை குறிவைத்து படுகொலை செய்த சம்பவங்களில் ஈடுபட்டதும் நடந்திருக்கிறது.
மேற்கண்ட அனைத்து சக்திகளும் - அவை பெரும்பான்மை தீவிரவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அல்லது சிறுபான்மை குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், இவை இந்த நாட்டின் வழக்கமான சட்டங்கள் மற்றும் உறுதியான நிர்வாக நடவடிக்கைகள் மூலமாக அவசியம் முறியடிக்கப்பட வேண்டும்.
இத்தகைய சக்திகளை தடுத்து நிறுத்துவதன் மூலம் இந்திய குடியரசின் மதச்சார்பற்ற - ஜனநாயக குணாம்சத்தை பேணுவது என்பது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை நிலைநாட்டுவோம் என்று கூறி பதவியேற்று அதிகாரம் செலுத்துபவர்களின் முதன்மையான கடமை ஆகும்.
இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தெரிவித்துள்ளது.