சென்னை:
கொரோனா நெருக்கடி நிலையில் புதிய சாலை அவசியமில்லை என்றும் சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநிலஅரசுகள் கைவிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
சென்னையையும் - சேலத்தையும் இணைக்கும் 276 கிலோமீட்டர் நீளமுள்ள 8 வழிச் சாலையை அமைத்திட மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டன. இச்சாலையை அமைத்திட ரூ. 10 ஆயிரம் கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டது.இச்சாலை அமைப்பதற்கு சுமார் 7500 ஏக்கர் சாகுபடி நிலங்களும், வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டு நிலங்களும் கையகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தன. மேலும்குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் பல ஏரிகள், நீர்நிலைகள், விவசாய கிணறுகள் அனைத்தும் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டிச் சாய்க்க வேண்டியுள்ளது. சில கிராமங்களில் வீடுகள் இடிபடுவதால் கிராமங்களே காலி செய்யும் நிலைமை உள்ளது. எனவே, இந்த 8 வழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டுமென பல கட்ட போராட்டத்தில் சம்பந்தப்பட்ட கிராமவிவசாயிகளும் ஈடுபட்டார்கள். அந்த விவ சாயிகளையும், அவர்களுக்கு ஆதரவாக குரலெழுப்பியவர்களையும் காவல்துறையைக் கொண்டு மிரட்டி கைது செய்து, பொய் வழக்கு புனைந்து சிறையில் அடைத்துவிட்டு கட்டாயமாக நிலங்கள் பறிக்கப்பட்டன.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடுக்கப்பட்டு 4.9.2019 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத் தின் தீர்ப்பில் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அனுமதி பெறாமல் நிலங்களை கையகப்படுத்துவதற்கான ஆணை வெளி யிட்டது தவறு எனவும், அந்த அரசாணையை ரத்து செய்ததுடன், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சம்பந்தப்பட்ட விவசாயிகள் வசமே ஒப்படைக்க வேண்டுமென தீர்ப்பு வழங்கியது.
கிராமப்புற மக்களின் நலன்களை புறக்கணித்த தீர்ப்பு
இந்த உத்தரவினை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.மேல்முறையீட்டினை விசாரித்த உச்சநீதிமன்றம் டிசம்பர் 8 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அனுமதி பெறாமல் நிலம் கையகப்படுத்துவதற்கு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ததுடன், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உடைமை யாளர்களின் பெயரில் ஆவணங்களை மாற்றித் தர வேண்டுமென உத்தரவிட்டு, மத்திய, மாநில அரசுகளை இடித்துக் கூறிய உச்சநீதிமன்றம், நிலங்களை கையகப்படுத்துவதற்கான உரிய சட்ட விதிகளை பின்பற்றி 8வழிச் சாலையை அமைக்கும் பணியை தொடரலாம் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட பல வாதங்களை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளாதது வருத்தமளிக்கிறது. குறிப்பாக, ஏற்கனவே மூன்று சாலைகள் இருக்கும் போது நான்காவது சாலை அவசியமில்லை என்பதும், விவசாய நிலங்கள், நீராதாரங்கள், காடுகள், பாசன கிணறுகள், விவசாயிகளின் வீடுகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவது குறித்து தீர்ப்பில் இடம்பெறாதது கிராமப்புற மக்களின் நலன்கள் மீது உச்சநீதிமன்றத்திற்கு அக்கறையில்லையோ என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கிராமப்புற மக்களுடைய வாழ்வாதாரத்தை சிதைக்கும்வகையில் சென்னை - சேலம் 8 வழிச் சாலைஅமைக்கும் பணியினை தொடர வேண்டா மெனவும், போக்குவரத்து நெரிசலை சமாளிக்கஏற்கனவே உள்ள சாலைகளை அகலப்படுத்து வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.மேலும், கொரோனா நெருக்கடியை சமாளிக்க வேண்டிய இந்த நேரத்தில் ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் புதிய சாலை அவசியமற்றது என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.