சென்னை, ஜூன் 9- சென்னையைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். அப்போது இவருக்கும், இளம் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த இளம் பெண், சிறுமி யிடம் நட்பாகப் பழகி தன்னுடைய பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்துள்ளார். சிறுமியை அழைத்துக் கொண்டு ஒரு அப்பார்ட்மெண்டிற்குச் சென்ற இளம் பெண், அவருடைய இரண்டு ஆண் நண்பர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
பின்னர் இளம்பெண், சிறுமியை வற்புறுத்தி இனிப்பு ஒன்றைக் கொடுத்த தாகவும், அந்த இனிப்பை சாப்பிட்டவுடன் சிறுமிக்கு அறை மயக்கம் ஏற்பட்டதாகவும் பின்னர் உடன் இருந்த இளம் பெண் அறையை பூட்டிவிட்டு தப்பிச் சென்ற தாகவும், பின்னர் அந்த பெண்ணுடன் வந்த இரண்டு ஆண் நண்பர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி காலையில் எழுந்து இளம்பெண்ணிடம் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்த தாகவும் தெரிவித்துள்ளனர்.
பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமி இரண்டு நாட்கள் கழித்து நடந்த சம்பவம் தொடர்பாக தனது சகோதரியிடம் தெரிவித்த நிலை யில், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. உடனடியாக சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமியை பிறந்தநாள் நிகழ்ச்சி என கூறி அழைத்துச் சென்றது பெருங்களத்தூரைச் சேர்ந்த பிரதிக்சா அகிரா என்பதும், இவர் சினிமாத் துறையில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது. மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது பிரதிக்சா அகிரா வின் காதலரான சோமேஷ் மற்றும் அவரது நண்பர் வில்லியம்ஸ் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, செல்போன் எண்ணை வைத்து இளம்பெண் பிரதிக்சா அகிரா மற்றும் வடபழனியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான சோமேஷ் என்ற சோமசுந்தரம் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் வில்லியம்ஸ் என்பவரை தேடி வருகின்றனர்.