tamilnadu

img

மக்கள் என்ன சொல்கிறார்கள்

விசாலாட்சி தோட்டத்தில் வசிக்கும் காந்தி, குப்பம்மாள் உள்ளிட்ட அப்பகுதி மக்கள்...
குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளுக்கு லாரிகள் மூலம்தான் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதில் தண்ணீரை பிடித்து குடத்தை தூக்கிக் கொண்டு தற்போதுள்ள 4 மாடிகளையே ஏற முடியாமல் சிரமப்படுகிறோம். குடத்தில் பிடித்து, பேரலில் ஊற்றி, சிறு மோட்டார் மூலம் மாடிக்கு தண்ணீரை கொண்டு செல்கிறோம். 8 மாடி, 10 மாடினு கட்டினால் தண்ணீர் எப்படி மேலே எடுத்து செல்ல முடியும்? லிப்ட் வசதி செய்து கொடுத்தால் கூட, அதில் தண்ணீர் கொண்டு செல்ல முடியுமா? எனவே, தற்போது எத்தனை வீடுகள் உள்ளதோ அதே அளவிற்குதான் வீடு கட்ட வேண்டும். வெளி ஆட்களை கொண்டு வந்து குடியமர்த்தக் கூடாது. வீடு கட்டி முடிக்க குறைந்தது 2 வருடம் தேவைப்படும் என்கிறார்கள். வீடுகளை காலி செய்து பொருட்களை எடுத்து செல்ல 8 ஆயிரம் ரூபாய் தருவதாக சொல்கிறார்கள். 2 வருடத்திற்கு வெளியே தங்கினால் வாடகை யார் தருவார்? எனவே, நொச்சிக்குப்பத்தில் செய்ததுபோல், அரசு தற்காலிக குடியிருப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். அதற்கான இடவசதி விசாலாட்சி தோட்டத்தற்கு அருகிலேயே உள்ளது. பயனாளிகள் பங்களிப்பு தொகையை தவணை முறை அல்லது மாத வாடகையாகத்தான் தர முடியும். ஒரேதவணையாக கொடுக்க முடியாது.

கபாலிதோட்டம் நலச்சங்க நிர்வாகிகள் என்.சுப்பிரமணி, வி.சிவக்குமார், என்.கிருஷ்ணகுமார்...
காலம் காலமாக வாழ்ந்த இடத்தில் குடிசை கட்டி வாழ்ந்த மக்களுக்கு அரசாங்கமே முன்வந்து குடியிருப்புகளை கட்டிக் கொடுத்தது. இப்போது பழைய வீட்டை இடித்துவிட்டு புது வீட்டை கட்டித்தருகிறோம். பணம் கொடுங்கள் என்ற கேட்டால் எப்படி தர முடியும்? இதேபகுதியில் ஏசி பிளாக் கட்டிடத்தை சில மாதங்களுக்கு முன்பு அரசு முழு மானியத்தில் கட்டிக் கொடுத்துள்ளது. அதேபோன்று அனைத்து பிளாக்குகளையும் கட்டித்தர வேண்டும். ஒவ்வொரு பிளாக்கும் தரை தளத்துடன் கூடிய 4 மாடிகள் கொண்டதாக உள்ளது. புதிய வீடுகள் கட்டுமபோது தரைத்தளத்தில் வாகன நிறுத்த வசதியுடன் கூடியதாக கட்டித்தர வேண்டும். வாரிய வீட்டில் ஒதுக்கீடு பெற்றவரிடம் இருந்து ஒருவர் வாங்கி குடியிருந்தால், குடியிருக்கும் நபருக்கே அந்த வீட்டை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

வழக்கறிஞர் என்.சண்முகசுந்தரம், பல்லக்கு மாநகர்
பல்லக்கு மாநகரில் கட்டப்படும் புதிய குடியிருப்புகள் எத்தனை பிளாக்குகள், எவ்வளவு வீடுகள் கொண்டது போன்ற விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். நொச்சிக்குப்பத்தில் குடியிருந்தவர்களுக்கு மட்டுமே புதிய குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. வேறு பகுதி மக்களை கொண்டு சென்று குடியமர்த்தவில்லை. அதேமுறையை பல்லக்குமாநகரிலும் பின்பற்ற வேண்டும்.

வனஜா, நவநீதம்... வன்னியபுரம் 
தேனாம்பேட்டையில் உள்ள வன்னியபுரம் ( மாநகராட்சி குடியிருப்பு) பகுதியில் 192 வீடுகள் உள்ளன. அதற்கு மேல் புதிய வீடுகள் கட்டக்கூடாது. புதியவீடு தர ஒன்றரை லட்சம் ரூபாய் கேட்கிறார்கள். பெயர் மாற்றம் செய்ய தனியாக 60 ஆயிரம் தனியாக கேட்கிறார்கள். 40 வருடமாக இதே பகுதியில் வசிப்பதால், தற்போதுள்ளதை விட சற்று பெரியதாக வீடு கிடைப்பதால் ஒன்றை லட்சத்தை தவணைமுறையில் தர தயாராக உள்ளோம். கட்டணமில்லாமல் பெயர் மாற்றம் செய்ய  வேண்டும். வாரிசுகளுக்கு வீடு கொடுப்பதாக இருந்தால் கூடுதலாக ஒன்றிரண்டு மாடிகள் கட்ட அனுமதிப்போம்.

எஸ்.குமார் (வள்ளீஸ்வரன் தோட்டம் குடியிருப்போர் நலச் சங்கத்தலைவர்), தமிழ்ச்செல்வி (பூ வியாபாரி)...
தற்போதைய குடியிருப்புகளையொட்டி போதிய இடவசதி இருந்தும் தற்காலிக குடியிருப்பை அமைத்து தர மறுக்கிறார்கள். எனவே, மாணவர்களுக்கு தேர்வு முடியும் வரை குடியிருப்புகளை காலி செய்ய முடியாது. பூக்கடை, மாவு கடை, உணவுகடை, பஜ்ஜிகடை, டைலர் கடை போன்ற சிறுசிறு கடைகள் குடியிருப்பு பகுதியில் உள்ளன. புதிய குடியிருப்புகள் கட்டும்போது கடைகளுக்கும் கட்டிடம் கட்டித்தர வேண்டும். வீட்டின் கட்டுமானத் தொகை மற்றும் கட்டிட வரைபடத்தை வெளியிட வேண்டும். பராமரிப்பு பணிகளை குடிசைமாற்று வாரியமே மேற்கொள்ள வேண்டும். பயனாளிகள் ஒவ்வொருவரும் ஒரே தவணையாக ஒன்றரை லட்சம் ரூபாய் கட்ட சாத்தியமில்லை. அந்தத் தொகையை தவணை முறையில் செலுத்த தயாராக உள்ளோம். 

ஆர்.சிவகாமி, எம்.மீனாட்சி, ராஜா முத்தையாபுரம்
தொகுதி முழுவதும் ஒரே நேரத்தில் குடியிருப்புகளை இடித்து கட்ட உள்ளனர். தற்காலிக குடியிருப்புகளையும் அமைத்து தர மறுக்கிறார்கள். இந்த தகவல் சுற்று வட்டாரம் முழுவதும் பரவிவிட்டது. இதனால் வாடகையை உயர்த்தி விட்டனர். வீடு கேட்டுச் சென்றால் அதிக வாடகை கேட்கின்றனர். இதனால் அருகாமையிலேயே வாடகை வீடு கிடைக்கவில்லை.  எனவே பகுதிபகுதியாக வீடுகளை இடித்து கட்டித்தர வேண்டும். புதிய வீடுகள் கட்டும்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

கோ.கண்ணன், ஆண்டியமான்ய தோட்ட குடியிருப்பபோர் சங்கத் தலைவர்
ஆண்டிய மான்ய தோட்டப்பகுதியில் காலியிடம் விரிந்து கிடக்கிறது. அந்த பகுதியை புதிய கட்டிடம் கட்டுவதற்கு அந்த இடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆகவே, அதிகப்படியான மாடிகள் கட்டத்தேவையில்லை. தற்போதுள்ள வீடுகள், அவர்களது வாரிசுகள், கடைகள், குடிசைகளை கணக்கிட்டு அதற்கேற்ப வீடுகள் கட்டித்தர வேண்டும். வெளிஆட்களை கொண்டு வந்து குடியமர்த்தக் கூடாது. தினசரி குழாய் மூலம் குடிநீர் வந்து கொண்டிருந்தது. தற்போது இரண்டு நாளைக்கு ஒருமுறை லாரி மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஒரு குடும்பத்திற்கு 7 குடம் தருகின்றனர். வேறுபகுதியில இருந்து புதிதாக ஆட்களை கொண்டு வந்து குடியமர்த்தினால் தண்ணீர் தட்டுப்பாடு மேலும் அதிகமாகும்.

எஸ்சிபி நண்பர்கள் குழுவினர், வன்னியம்பதி
400 சதுர அடி பரப்பளவு வீடு என்று அதிகாரிகள் கூறினாலும், வரைப்படத்தில் 270 சதுர அடி என்று குறிப்பிட்டுள்ளார்கள். அந்த வீடுகiயும் வாகன நிறுத்த வசதியின்றி கட்டுகின்றனர். இதுசரியல்ல. தற்போதுள்ள மாடலில் வாகன நிறுத்த வசதியோடு வீடு கட்ட வேண்டும். பொதுபயன்பாட்டிற்கு 50 அடி போனால் கூட வீட்டின் உள்அளவு குறைந்தபட்சம் 350 சதுர அடி இருக்க வேண்டும். அதிகாரிகள் ஒவ்வொருவரிடம் மாறுபட்ட தகவல்களை கூறி பதட்டத்தை உருவாக்குகின்றனர். எனவே, அதிகாரிகள் வெளிப்படைத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும்.

சிவக்குமார், சீனிவாசபுரம்
சீனிவாசபுரத்தில் இரு பிரிவாக குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. இவற்றையொட்டி மீனவ குடியிருப்புகளும், மற்றொரு பகுதியில் குடிசை வீடுகளும் உள்ளன. மீனவ குடியிருப்புகள் அடிக்கடி கடல் அரிப்பால் பாதிக்கப்படுகின்றன. எனவே, குடிசைமாற்று வாரிய வீட்டில் வசிப்பவர்கள், அவர்களது வாரிசுகள் மற்றும் சீனிவாசபுரத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் முழு மானியத்தில் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். தற்போதுள்ள கடைகளையும் கணக்கிட்டு அவற்றிற்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

அன்புரோஸ், நொச்சிக்குப்பம்
நொச்சிக்குப்பம் குடிசைமாற்று வாரிய வீடுகளில் வசிப்பவர்களது வாரிசுகளுக்கு (விரிவடைந்த குடும்பங்கள்) வீடு வழங்க 2012ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தி 220 பேரை பட்டியலிட்டது. ஆனால் அரசு  வீடுகட்டித் தரவில்லை. தற்போது நொச்சிக்குப்பம் அருகே ஆயிரத்து 118 வீடுகள் கட்டப்படுகிறது. அதில், நொச்சிக்குப்பம் முழுவதும் உள்ள குடும்பங்களின் வாரிசுதாரர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.