தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளதால் தேர்வுகளை ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இதனையடுத்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தேர்வு குறித்து புதிய மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில், ”அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் தேர்வுகளை வரும் ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
இந்நிலையில், மூன்றாம் பருவத் தேர்வுகளை ஏப்ரல் 1-ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதற்கான தேர்வு கால அட்டவணைகளை மாற்றி, முதன்மை பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்டங்களின் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். மேலும், சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்கலாம்” என கூறப்பட்டுள்ளது.