tamilnadu

பொறியாளர்களின் சம்பளத்தை குறைப்பதா?: துரைமுருகன் கண்டனம்

சென்னை:
பொதுப்பணி நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சம்பளத்தை குறைத்து அதற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு ஊழியர்கள், அரசிடம் ஊதியம் வாங்கிக்கொண்டு பணியாற்றுவார்கள். சில நேரங்களில் அவர்கள் ஊதிய உயர்வு கேட்டு அரசுக்கு விண்ணப்பம் தருவார்கள். அரசு அலட்சியமாக இருந்தால், போராட்டம் நடத்துவார்கள். பிறகு, அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறும். அதிலும் தீர்வு ஏற்படாவிட்டால் துறை அமைச்சர் முன்னிலையிலோ அல்லது முதலமைச்சர் முன்னிலையிலோ பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது உண்டு.சில நேரங்களில் தீர்வு காணாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவதும் உண்டு. இதுதான் நடைமுறையில் நான் பார்த்தது. ஆனால் அதிமுக ஆட்சியில் எந்த ஆட்சியிலும் நடக்காத ஒரு அதிசயம் நடந்திருக்கிறது. அதிலும் முதலமைச்சர் பொறுப்பேற்றிருக்கின்ற பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் ஊதிய உயர்வு கேட்ட பொறியாளர்களுக்கு, அவர்கள் ஏற்கனவே வாங்கிக் கொண்டிருக்கின்ற ஊதியத்தையே குறைத்து வழங்கிய ஆட்சி, நான் அறிந்தவரையில் இந்தியாவிலேயே அதிமுக ஆட்சியாகத்தான் இருக்கும்.ஊதிய உயர்வு தர முடியாவிட்டால் முடியவில்லை என்றுதான் சமாதானம் சொல்லுவார்களே தவிர, வாங்கிக் கொண்டிருக்கின்ற ஊதியத்தையா குறைப்பார்கள்? பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ் சாலைத்துறைகளை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் தன் துறையினருக்கு சற்று இரக்கம் காட்டியிருக்கலாம்.

‘ஊழியர் ஊதியம் குறைத்த முதலமைச்சர்’ என்ற பட்டம் பெறாமல் இருந்திருக்கலாம். எப்படியோ, அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அளித்த ஊதிய உயர்வை அதிமுக அரசு தட்டி பறித்துவிட்டது.முன்னாள் பொதுப்பணித்துறை, நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் என்ற முறையில் இன்னலில் இருக்கும் பொறியாளர் நண்பர்கள் “கவலையை விடுங்கள்.திமுக ஆட்சி மீண்டும் உதயமான பின்னர்உங்கள் கோரிக்கையை என் தோளில் சுமந்து சென்று தீர்வு காண்பேன்” என்று உறுதி அளிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.