சென்னை:
ரூ.2500 உடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளைத் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் அரிசி நியாயவிலைக் கடை அட்டைதாரர்களுக்குப் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய தொகுப்புடன் பொங்கல் பரிசு ரூ.2,500 வழங் கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்காகப் பரிசுத் தொகுப்பு வழங்க ரூ.5,604 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.இதையடுத்து பொங்கல் பரிசுத் தொகை ரூ.2,500 வழங்குவது தொடர் பாக அரசாணை வெளியிடப்பட்டது. இதனையொட்டி பொங்கல் பரிசாக தலா ரூ.2,500 வழங்கும் திட்டத்தைக் கடந்த 21ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு நெறிமுறைகள்:
தமிழ்நாட்டில் உள்ள இரண்டு கோடியே 6 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டைகளுக்குப் பொங்கல் பரிசு வழங்கும்போது முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பெண்களுக்குத் தனி வரிசை அமைக்க வேண்டும்.மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாயவிலைக் கடைகளில் கூடுதலாக ஒரு பணியாளரை நியமிக்க வேண்டும். ஒருநாளை காலை 100 பேர், பிற்பகல் 100 பேர் எனப் பிரித்து 200 குடும்ப அட்டைகளுக்குப் பரிசுத் தொகையை வழங்க வேண்டும்.அனைவருக்கும் ஜனவரி 13ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு மற்றும் பரிசுத் தொகுப்பை வழங்கி முடிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ரொக்கப் பணத்தை உறையில் வைத்து வழங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.