tamilnadu

img

நவ.26 மறியலில் பங்கேற்பீர் : வாலிபர் சங்கம் அழைப்பு....

சென்னை:
மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத, தேச விரோத கொள்கைகளுக்கு எதிராக நவம்பர் 26 அன்று நடைபெறும் மறியல் போராட்டத்தில் வாலிபர்கள் பங்கேற்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. 
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர்என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுப்போம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துஅதிகாரத்தைக் கைப்பற்றிய நரேந்திர மோடி  தலைமையிலான மத்திய அரசு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வில்லை என்பது மட்டுமின்றி இருக்கிற வேலைவாய்ப்புகளையும் பறிக்கிற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசுப் பணியிடங்களில் நிரந்தரப் பணியாளரை நியமிக்காமல் ஒப்பந்த அடிப்படையிலும், அவுட் சோர்சிங் அடிப்படையிலும் பணியமர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதன் மூலம் இளைஞர்களின் உழைப்பை சட்டவிரோதமாக சுரண்டிவருகிறது.  இத்தகைய சட்டவிரோத உழைப்புச் சுரண்டலுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில் தொழிலாளர் நலச் சட்டங்களை மத்திய அரசு திருத்தியுள்ளது. தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்களை எதிர்த்தும், காலிப்  பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், புதிய வேலைவாய்ப்பு களை உருவாக்க வலியுறுத்தியும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நவம்பர் 26 அன்று நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு  இந்திய ஜனநாயகவாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது. மேலும், அன்றைய தினம் நடைபெறவுள்ள மறியல் போராட்டத்திலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்பங்கேற்கிறது. வாலிபர்கள்  பெருந்திரளாக மறியல் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;