tamilnadu

img

சிறுபான்மையர் - அனைத்துப் பகுதி மக்கள் மேம்பாடு அடைய பணிகள் தொடரட்டும்..... முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வாழ்த்து....

சென்னை:
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின்  சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நடந்து முடிந்த 16-வது சட்டமன்றத்திற்கான  தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மக்களின் பெரும் நம்பிக்கையை பெற்றுமிகப்பெரும் வெற்றியை அடைந்துள்ளது. தமிழகத்தின் முதல்வராக தாங்கள் பொறுப்பேற்றதை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள்நலக்குழு சார்பில் வாழ்த்துகிறோம்; வரவேற்கிறோம். 

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற சமயச்சார்பின்மை, நல்லிணக்கம், மனிதநேயம் எனும் விழுமியங்கள் அடிப்படையில் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் நலன்கள், உரிமைகள் பேணப்பட வேண்டும் என்ற அக்கறையில் தமிழகத்தில் உருவாகி செயல்பட்டு வருகிறது. எங்கள் அமைப்பு சிறுபான்மை மக்களின் நலனை முன் நிறுத்துவதில் அனைத்து பிரிவு மத நம்பிக்கை கொண்டவர்கள், பல்வேறு அரசியல்
கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகளை சார்ந்தவர்கள், ஜனநாயக எண்ணம் கொண்டோர் ஒன்றிணைந்து கட்சி, மத பேதம் தாண்டி உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் அமைப்பாகும்.

தேசிய அளவில் தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகிற போது, அவர்களின் உரிமைகள் கேள்விக்குறியாகிற போது அதற்கு எதிராக அனைத்துப்பகுதி மக்களையும் ஒன்றிணைத்து தொடர்ந்து போராடி, இயங்கிவரும் அமைப்பாகும்.தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும்,நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் மதச்சார்பற்றமுற்போக்கு கூட்டணி வெற்றி பெற பாடுபட்ட அமைப்பாகும். ஒரு மதத்தின் பெயரால் அரசியல் செய்து கொண்டிருக்கக்கூடிய இந்துத்துவா சக்திகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற அடிப்படையில் தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற- சட்டமன்ற தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக களம் இறங்கி, பிரச்சாரம் செய்து சிறுபான்மை மக்களின் பெருவாரியான வாக்குகளை, ஜனநாயக எண்ணம் கொண்டோரின் பெருவாரியான வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பதில் தேர்தல் களத்தில் மிகத் தீவிரமாக பணியாற்றிய அமைப்பாகும்.

தங்கள் தலைமையில் பொறுப்பேற்றிருக்கிற அரசு தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களின் நலன்களுக்காக, மேம்பாட்டுக்காக தொய்வின்றி பணியாற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் சிறுபான்மை மக்களின் அச்சமற்ற வாழ்க்கைக்காக, சிறுபான்மை மக்களின் நலனுக்காக,மேம்பாட்டுக்காக ஒரு சமரசமற்ற செயல்பாட்டைதங்கள் அரசு செயல்படுத்திக் காட்டும் என்ற நம்பிக்கையிலும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறோம்.

கடந்த ஏழு ஆண்டுகளாக மத்திய பாஜக ஆட்சியாளர்கள் சிறுபான்மை மக்களை அச்சத்தின் பிடியில் வைத்து, இந்தியாவின் இரண்டாந்தரப் பிரஜைகளாக்க முயற்சித்து வருகிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரில் இந்திய நாட்டின் மக்களாகிய இஸ்லாமியர்களை  தேசத்திலிருந்து விரட்டியடிக்க துடித்துக் கொண்டிருக்கிறது.சிறுபான்மை மக்களின், விளிம்புநிலை மக்களின் நலனுக்காக குரல் கொடுத்தஅறிஞர் பெருமக்கள், பத்திரிகையாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் இந்தியாவின் பல்வேறு சிறைச்சாலைகளில் கொடும் சட்டங்களால் சிறைக் கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு உரிமைகள் பறிக்கப்பட்டு, அந்த மாநிலமே சிதைக்கப்பட்டு,  முற்றிலும் சீரழிக்கப்பட்டவற்றிற்கு எதிராகவும் திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட முற்போக்கு சக்திகள் தமிழகத்தில் ஒரு வலுவான இயக்கத்தை கடந்த காலங்களில் நடத்தியுள்ளன. தாங்களும் அவ்வியக்கங்களில் பங்கேற்று இருக்கிறீர்கள்.

சிறுபான்மையரின் நலனுக்கான பரிந்துரைகளை அமல்படுத்துக! 
எனவே   தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எந்த வழியிலும் அமல்படுத்தாமல் இருப்பதற்கும்,  சிறுபான்மை மக்களின் நலன்களுக்காக முன்வைக்கப்பட்ட சச்சார் குழுவின்ஆய்வறிக்கை, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா வழிகாட்டுதல்களை தமிழகத்தில் அமல்படுத்தி, சிறுபான்மை மக்களின் கல்வி,வேலைவாய்ப்பு, குடியிருப்பு,  தொழில் வளர்ச்சி போன்றவற்றில் தாங்கள் அக்கறை செலுத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

காஷ்மீர் மக்களின் சிறப்பு உரிமைகள் மீண்டும் கிடைத்திட,மாநில உரிமைகள் பாதுகாத்திட தங்களுக்கான முழு பலத்தை பயன்படுத்தி குரல் கொடுக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்காக, விளிம்புநிலை மக்களுக்காக குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிற அறிஞர் பெருமக்கள் விடுதலையை வலியுறுத்தவேண்டும். தலித் கிறிஸ்தவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமைபாதுகாத்திட வேண்டும்.    சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையையும், அவர்களின் தேவைக்கேற்ப அடக்கஸ்தலங்களை உருவாக்க தங்கள் அரசு உதவிட வேண்டும்.. தமிழகசிறைச்சாலைகளில் நீதிக்குப் புறம்பாக, குறிப்பாக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடாத, குற்றம் நிரூபிக்கப்படாமல் பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளையும் தண்டனை காலம் முடிந்தும் சிறைவைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு துவக்கப்பட்ட காலத்திலிருந்து தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கான ஒரு துறையை மாநில அரசு உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தங்கள் தலைமையிலான அரசு சிறுபான்மை மக்கள் நலத் துறையை உருவாக்கி செயல்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது. தங்களின் இந்த சீரிய முயற்சி சிறுபான்மை மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்குமென்றும், வாழ்க்கை மேம்பாட்டை உறுதி செய்யும் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அதற்காக மீண்டுமொருமுறை எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

மாவட்ட சிறுபான்மை ஆணையர் குழு கூட்டங்களை ஒவ்வொரு மாதமும் நடத்துவதை உறுதி செய்து அந்த மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான சகல சாத்தியங்களையும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர தாங்கள் உத்தரவிட வேண்டும். தமிழக சிறுபான்மை மக்கள் பெரும் நம்பிக்கையோடு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு, தங்களுடைய தலைமைக்கு பெருவாரியாக வாக்களித்துள்ளனர்.தங்களது அரசின் துவக்கமே மக்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையும், மரியாதையும் உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு இலவச பஸ் பயண அனுமதி, முதல்வருக்கு வரும் கோரிக்கை மனுக்களை பரிசீலித்து நிறைவேற்ற தனி துறை, கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவ சேவைகள், குடும்ப அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் நிவாரணம் போன்ற அறிவிப்புகள் மக்கள்மத்தியில் தங்கள் அரசுக்கான ஆதரவை பெருக்கியுள்ளது. இந்த நற்பணிகள் தொடரட்டும்.தமிழகம் அனைத்துத் துறைகளிலும் மேம்பாட்டை அடையட்டும். அதன் மூலம் சிறுபான்மை மக்களின் நலனும்,அனைத்துப் பகுதி மக்களின் நலனும் மேம்படட்டும். இந்த நற்பணிகளை துவங்கியிருக்கிற தங்கள் அரசுக்கு மீண்டும் ஒருமுறை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக  வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும்  தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

;