அரக்கோணம் பகுதியில் அர்ஜூன், சூர்யா என்ற இரு தலித் இளைஞர்கள் கொடூரமாக கொலை
செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இவர்களோடு தாக்குதலுக்கு உள்ளான இரண்டு
இளைஞர்கள் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வருகின்றனர். சாதீய வன்மத்தோடு நடைபெற்றுள்ள இப்படுகொலைக்கு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
அரக்கோணத்தை அடுத்த சோகனூர் கிராமத்தைச்சார்ந்த அர்ஜீன், சூர்யா, மதன், வல்லரசு, சவுந்தராஜன்
ஆகிய தலித் இளைஞர்களை, பாமக மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள், நீங்கள் எந்தக்
கட்சிக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டதாகவும், நாங்கள் திமுக கூட்டணிக்குத்தான் வாக்களித்தோம் என்று
பதிலளித்துள்ளனர். இதனையொட்டி இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், மேற்கண்ட
இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இரு கிராமத்தில் இருந்தவர்களுக்கிடையில்
சில பிரச்னைகள் இருந்தாகவும் கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவே சாதீய வன்மத்துடன் இந்தப் படுகொலை நடந்துள்ளது.
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் பெருமளவு அமைதியாக நடந்துள்ள சூழ்நிலையில், அரக்கோணத்தில்
நடந்துள்ள இந்த கொடூர சம்பவம் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அராஜக நடவடிக்கைகளுக்கு
நாகரிக மக்கள் சமூகம் ஒருபோதும் இடம் கொடுக்கக்கூடாது.
படுகொலை செய்யப்பட்ட அர்ஜூன், சூர்யா ஆகியோரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு.
அவர்களது குடும்பத்தினருக்கு அரசு தலா ரூபாய் 50 லட்சமும், படுகாயமடைந்த குடும்பத்திற்கு தலா ரூபாய்
20 லட்சமும் நிவாரணமாக வழங்க வேண்டுமென வுற்புறுத்தி கேட்டுக்கொள்கிறோம். படுகொலைக்கு காரணமானவர்களை
உடனடியாக கைது செய்து அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக
காவல்துறையையும் தமிழக அரசையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வற்புறுத்துகிறது.
தற்போது அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன்,
அப்பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் அமைதிகாக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.