tamilnadu

img

மக்களவை கூட்டத் தொடர் ரத்து: திமுக கடும் கண்டனம்....

சென்னை:
எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் மக்களவையின் குளிர்காலக் கூட்டத்தொடரை ரத்து செய்ததற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

திமுக பொருளாளரும் மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-கொரோனா நோய்த் தொற்றைக் காரணம் காட்டி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரை மத்திய பாஜக அரசு ரத்து செய்திருப்பதற்கு திமுக சார்பில் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்திய-சீன உறவு மிக மோசமான நிலையில் இருக்கிறது என்று ஒருபுறம் நாட்டின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ள எல்லையில் பிரச்சனை.இன்னொரு பக்கம் தலைநகர் தில்லியின் எல்லையில் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து விவசாயிகள் இரவு பகலாக தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தும் போராட்டம் என்று மிக தலையாய பிரச்சனைகள் இன்றைக்கு அணிவகுத்து நிற்கின்றன.

இப்பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத்தொடரை நடத்த மத்திய பாஜக அரசு விரும்பவில்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது.விவசாயிகள் போராட்டம் தேசிய பிரச்சனையாக மாறலாம் என்று எச்சரித்துள்ள உச்சநீதிமன்றம் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை உச்சநீதிமன்றமே உணர்ந்து தீர்வுகாண முன்வருகின்ற நேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதைப் பற்றியும் கவலைப்படாமல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் குளிர்காலக் கூட்டத்தை ரத்து செய்வது குறித்துக் கலந்து ஆலோசனை கூட நடத்தாமல் எதேச்சதிகாரமாக முடிவு எடுத்து நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடக்காது என்று அறிவிப்பது ஏற்றுக்கொள்ள இயலாத நடைமுறை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;