tamilnadu

img

தமிழகத்தில் 27 மாவட்டங்களில்  உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு  தொடங்கியது

தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிர்த்து, 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 91 ஆயிரத்து 975 பதவியிடங்களை நிரப்பிட இரண்டு கட்டமாக நேரடித் தோ்தல் அறிவிக்கப்பட்டது. 
இந்நிலையில் இன்று முதல் கட்டவாக்குப்பதிவு  காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில் முதல் கட்டத்தில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு போட்டியிடுபவர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. 

இதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. முதல் கட்ட தேர்தலில் ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். ஊராட்சி தேர்தலுக்காக 702 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 13 ஆயிரத்து 62 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். பாதுகாப்பு பணிக்காக 63 ஆயிரம் போலீசார் பணி அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.
2-ம் கட்ட தேர்தல் 30-ந்தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 2-ந்தேதி நடைபெற இருக்கிறது

;