tamilnadu

img

சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள்... ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நிறைவு....

சென்னை:
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் 2வது நாளாக ஆலோசனை மேற் கொண்டனர்.தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே மாதம் முடிவடைய உள்ளதால் அதற்கு முன்பாக சட்டப்பேரவைக்கு பொதுத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

தேர்தல் ஏற்பாடுகள் தொடர் பாக ஆலோசனைகள் வழங்கவும், அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்கவும், அதிகாரிகளுடன் ஆலோசிக்கவும் தலைமை தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் திங்களன்று(டிச.21) சென்னை வந்தனர்.இந்த குழுவில் தேர்தல் துணை ஆணையர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஸ் குந்ரா, பீகார் தலைமை தேர்தல் அதிகாரி சீனிவாசா, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, செயலாளர் மலேய் மாலிக் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா ஓட்டலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந் தித்து கருத்து கேட்டு அறிந்தனர்.

அப்போது தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக, அதிமுக, சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரநிதிகள் மனு கொடுத்தனர்.அதன் பிறகு தேர்தல் ஆணைய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் (தேர்தல் அதிகாரிகள்) காணொலி வாயிலாக ஆலோசனைகள் மேற்கொண்டனர். காவல்துறை மாவட்ட கண் காணிப்பாளர்களுடன் இணைந்து இந்த கூட்டம் நடத்தப்பட்டது.இரண்டாவது நாளான டிச.22 அன்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் அமலாக்கத்துறை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் உளவுப்பிரிவு அதிகாரிகள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் தேர்தல் நடத்தும் போது என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும், பதட்டமான தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள், வாக்குச் சாவடிகளில் என்னென்ன வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப் பட்டது.தேர்தலின்போது பணப்புழக் கத்தை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனைகள் நடத்தினர்.இந்த கூட்டம் முடிந்ததும் தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்கா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உடனிருந்தார்.

;