tamilnadu

img

நெடுஞ்சாலைகளை தனியாருக்கு கொடுப்பதை கண்டித்து ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு...

சென்னை:
நெடுஞ்சாலைகளை தனியாருக்கு கொடுப்பதை கண்டித்து வியாழனன்று (டிச.3) சாலைப் பணியாளர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினர்.நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகளை தனியாருக்கு கொடுப்பதை கைவிட வேண்டும், ஏற்கெனவே கொடுக்கப்பட்ட சாலைகளை கையகப்படுத்தி பராமரிப்பு பணிகளை அரசே செய்ய வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், 7வது ஊதிய மாற்று பலன்களை வழங்க வேண்டும்,10 சதவீத ஆபத்துப்படி, நிரந்தரப்பயணப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை  முதன்மை இயக்குநர் அலுவலகம் வளாகத்தில் இந்த போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதனையொட்டி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நெடுஞ் சாலைத்துறை முதன்மை இயக்குநர், தலைமைப் பொறியாளரும், சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில், நிதி தொடர்பான கோரிக்கைகளை ஜனவரி மாதம் முதல் நிறைவேற்றி தருவதாகவும், நிர்வாக ரீதியான கோரிக்கைகள் குறித்து டிச.7 ஆம் தேதிக்கு பிறகு இணை இயக்குநர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.இந்தப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, தென் சென்னை மாவட்டத் தலைவர் டேனியல் ஜெயசிங்,  சாலைபணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ், பொருளாளர் இரா.தமிழ் உள்ளிட்டோர் பேசினர்.

;