சென்னை, மே 18-பட்டினப்பாக்கம் அருகே உள்ள டுமீல்குப்பத்தில் கடற்கரையோரம் குடிசை வீடுகள் உள்ளன. இங்கு சனிக்கிழமை அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் குடிசைகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியில் ஓடி வந்தனர்.இதுபற்றி உடனடியாக தீயணைப்பு துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் இருந்து 3 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 15 குடிசைகள் தீயில் எரிந்து நாசமானது.15 குடிசைகளிலும் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன. இதனால் அங்கு வசித்தவர்கள் உடமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். தீ விபத்து ஏற்பட்டதும் குடிசைகளில்தூங்கிக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக வெளியேறி விட்டதால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.