சென்னை:
விவசாயிகளின் போராட்டத்தை சீர்குலைத்து வருவதால் அதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் தமிழக அரசு தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:-
மத்திய அரசு செப்டம்பர் மாதம் நிறைவேற்றி யுள்ள மத்திய விவசாயிகள் விரோதச் சட்டங்களையும், மின்சார சட்டத்திருத்த மசோதாவையும் திரும்பப் பெற வலியுறுத்தி, நவம்பர் 26 முதல் தலைநகர் தில்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் அமைதியான முறையில், ஜனநாயக வழிமுறையில் போராடி வருகிறார்கள். 18வது நாளாக தொடரும் போராட்டத்தை ஆதரித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் நாடு முழுவதும் விவசாயிகள் ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. அமைதியான முறையில் தொடங்கியுள்ள போராட்டத்தை தமிழ்நாடு அரசு, காவல்துறை மூலம் சீர்குலைத்து, சிறுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள அமைதிமுறை போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையின் தலையீட்டை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என மாநில முதலமைச்சரை வலியுறுத்திக் கொள்கிறது.இதில் காவல் துறையின் அத்துமீறல் தொடருமானால் ஏற்படும் விளைவுகளுக்கு தமிழ்நாடு அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.