tamilnadu

img

ஐஐடி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கும்... 1ம் பக்கத் தொடர்ச்சி

 1ம் பக்கத் தொடர்ச்சி...

கலால் வரியை குறைப்பதற்கு மாறாக, கொரோனா காலத்தில் கூட இரண்டு முறை கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களிடமிருந்து கொள்ளையடிப்பது ஏற்க இயலாது.சர்வதேச சந்தையில் விலை குறைந்தால்,இங்கேயும் விலை குறையும் என வசீகரமாக பேசியவர்கள் சர்வதேச சந்தையில் விலை குறையும் போது, இங்கு ஏன் விலையை உயர்த்த வேண்டும்?.வேலைவாய்ப்பு சுருங்கியும் - இல்லாத சூழலும் - அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும் ஏற்பட்டுள்ள இச்சூழலில் மக்களை மேலும், மேலும் கடும் சிரமத்திற்கு உள்ளாக்கும் அநியாய கேஸ் விலை உயர்வை கண்டிப்பதோடு, உடனடியாக விலை உயர்வை திரும்பப்பெற  மத்திய - மாநில அரசுகள் உரிய தலையீடு செய்ய வேண்டும். 

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்ய வெளியிடப்பட்ட அறிவிக்கையை கைவிடுக!
தேசிய கல்விக்கொள்கை 2020, ‘‘ஆயுஷ்’’என்றழைக்கப்படும் ‘இந்திய மருத்துவமுறைகளை ‘’அலோபதி’’ என்றழைக்கப்படும் நவீன அறிவியல் மருத்துவத்துடன் இணைத்து ‘’கலவை’’ மருத்துவமுறையை (MIXOPATHY) உருவாக்கவேண்டும்’ என்று வலியுறுத்துகிறது. இதன் அடிப்படையில் ‘’நிதி ஆயோக்’’ அமைத்த துணைக்குழு கி.பி.2030க்குள் இந்தக் கலவை முறையை (MIXOPATHY) நடைமுறைப்படுத்துமாறு ‘‘ஆயுஷ்” மற்றும் “மக்கள் நல்வாழ்வுத்துறை” அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தி யதன் அடிப்படையில், இந்திய மருத்துவ மத்தியக் கவுன்சில் (Central Council of Indian Medicine) இந்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்திய மருத்துவ முறைகளைப் போதிய நிதி ஆதாரம் மற்றும் அறிவியல்ஆராய்ச்சியுடன் கூடிய வளர்ச்சியை உறுதிப்படுத்துவதன் மூலம், அவற்றின் தனித்தன்மையைப் பாதுகாத்து வளர்த்தெடுக்கவேண்டும். மாறாக, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் நடவடிக்கைகள், நவீன மருத்துவத்தை சீர்குலைப்பதுடன், இந்திய மருத்துவமுறைகளை நாளடைவில் முற்றாக அழித்துவிடும். மேலும்,  பணம் படைத்தோர் ‘’நவீன மருத்துவ கார்ப்பரேட்’’ மருத்துவமனைக்கு செல்லும் போது, ஏழை எளிய மக்கள் இத்தகைய ‘கலவை’ மருத்துவத்தை நம்பியிருக்க வேண்டியிருக்கும்.

மருத்துவ ரீதியாக மிகுந்த பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி செய்ய வேண்டிய அறுவைசிகிச்சை முறைகளை - நவீன மயக்கவியல் அறிவோ அல்லது ஆண்டிபயாட்டிக் போன்ற மருந்துகளின் பயன்பாடோ தெரியாமல், அறுவை சிகிச்சை செய்வது மனித உயிர்களோடு விளையாடுவது போன்றது. அதிக அளவில் பின்விளைவுகள் (Complication)  ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.மேலும் பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் முதல் பல்வேறு உயர்நீதிமன்றங்கள் வரை, மருத்துவர்கள்  தான்பயின்ற மருத்துவமுறையை மட்டுமேபின்பற்றி சிகிச்சை அளிக்க வேண்டுமென வும், தான் படிக்காத - பயிற்சி பெறாத மருத்துவமுறைகளை பின்பற்றினால், அது தண்டனைக்குரிய குற்றம் என்று தீர்ப்பளித் திருக்கின்றன.எனவே, மத்திய அரசு இதுபோன்ற ‘கலவைமுறை’ மருத்துவத்திட்டத்தை உடனடியாகக் கைவிடவேண்டும். நவீன அறிவியல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவ முறைகளின் தனித்துவத்தைப் பாதுகாத்து - போதியநிதியளித்து, ஊக்கப்படுத்தி - வளர்க்க வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்றவாறுஅதிக எண்ணிக்கையில் அரசு மருத்துவக்கல்லூரிகளையும், மருத்துவமனைகளையும் மத்திய மாநில அரசுகள் உருவாக்கிட வேண்டும்.

கோவிட்-19 தடுப்பூசியை இலவசமாக வழங்கிடுக!
கோவிட்-19 தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சைப்பணியில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து அரசு மருத்துவர்களுக்கும், பிற மருத்துவத்துறை ஊழியர்களுக்கும் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட ‘’சிறப்பு ஊதியத்தை’’ இன்னும் அளிக்காமல் இழுத்தடிப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வன்மையாக கண்டிப்பதோடு, அதனை உடனடியாக விரைந்து வழங்கிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.மக்கள், கோவிட்-19 தொற்று அபாயத்தி லிருந்து இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில், இதற்காக ஏற்படுத்தப்பட்ட ‘‘சிறப்பு மருத்துவமையங்களை’’ தொடர்ந்து பராமரிக்க வேண்டும். கோவிட் தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட பின்பும் அவ்வப்போது மக்களை அச்சுறுத்துகிற ‘’டெங்கு’’ போன்ற தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக, அவற்றை “தொற்று நோய் மருத்துவமனைகளாக” தொடர்ந்து பராமரிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். கோவிட்-19 தடுப்பூசிகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இலவசமாக அளித்திட மாநில அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை துவங்கிடுக!
2015ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தமிழகத்தில் மதுரை அருகே, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ரூ.1,264 கோடி மதிப்பிலான, சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம்ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். இம்மருத்துவ மனை 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பு படாடோபமாக வெளியாகி பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் “நிலம் கையகப்படுத்துதல்’’ உட்பட பல அடிப்படை வேலைகள் எதுவும் துவங்காமல் வெறும் வெற்று அறிவிப்பாகவே உள்ளது. தென்மாவட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு பலன் தரும் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதாலேயே மேற்கண்ட பணிகள் துவங்கப்படாமல் உள்ளது என்பதை   சிபிஐ (எம்) மாநிலக்குழு சுட்டிக்காட்டுகிறது.எனவே, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைப்பதற்கான பணிகளை உடனடியாக துவங்கிட வேண்டுமெனவும், ஏற்கனவே திட்டமிட்டப்படி 2022ம் ஆண்டிற்குள் கட்டி முடித்து மக்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதமளிக்க வேண்டுமெனவும் சிபிஐ (எம்) மாநிலக்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

;