புதுதில்லி:
டிசம்பர் 6 டாக்டர் அம்பேத்கர்நினைவு தினத்தை, அரசமைப்புச்சட்டத்தைப் பாதுகாக்கும் தினமாக அனுசரித்திடுவோம் என்று விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன.
அகில இந்திய அளவில் செயல்பட்டுவரும் ஐந்து அகில இந்தியவிவசாயத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டுக் கூட்டம் புதுதில்லியில் இந்திரஜித் குப்தா வீதியில், அஜாய் பவனில் உள்ள பாரதிய கேத் மஸ்தூர் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பி. வெங்கட், பாரதிய கேத் மஸ்தூர் யூனியன் சார்பில் குல்சார் சிங்கோரியா, அகில இந்திய விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்சங்கம் சார்பில் ராதிகா மேனன், சம்யுக்த கிசான் சபா சார்பில் அசித்கங்குலி மற்றும் அகில இந்திய அக்ரகாமி கிருஷி கிராமிக் யூனியன் சார்பில் தர்மேந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.தற்போது நாட்டில் விவசாயத் தொழிலாளர்களின் பரிதாபகரமான நிலை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசாங்கங்களின் மக்கள் விரோத, விவசாயத் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கிரிமினல்களை பாதுகாக்கும் பாஜக அரசுகள்
பாஜக தலைமையிலான மத்தியஅரசாங்கம் பின்பற்றும் இந்துத்துவா நிகழ்ச்சிநிரல், சமூகத்தில் மதவெறித் தீயை விசிறிவிடுவது மட்டுமல்லாமல், நாளுக்கு நாள் தலித்துகள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடக்கூடிய கயவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள பாஜக அரசாங்கங்கள் கிரிமினல்களைப் பாதுகாக்கும் விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.மேலும், மத்திய அரசாங்கம் பின்பற்றும் பொருளாதாரக்கொள்கைகள் கிராமப்புற ஏழைமக்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. அவர்களை லாபம் ஈட்டும்கார்ப்பரேட்டுகளின் கருணையில் வாழ்வதற்குத் தள்ளி இருக்கிறது. மேலும் கொரோனா வைரஸ்தொற்றைப் பயன்படுத்திக்கொண்டு சமூக நலத் திட்டங்களையும் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறது. இன்றையதினம் விவசாயத் தொழிலாளர்களை, வேலை அளிப்பவர்கள் அவர்கள் மீது திணித்திடும் சுரண்டலைத் தடுத்து, அவர்களைப் பாதுகாக்கக்கூடிய விதத்தில் எந்தச் சட்டமும் கிடையாது. குறைந்தபட்ச ஊதியம் கண்டுகொள்ளப்படுவதில்லை. அளிப்பதாகக் கூறப்படும் ஊதியங்களும் காலத்தே கிடைப்பதில்லை. எனவே இன்றையநிலையில் விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாத்திட ஒரு மத்திய சட்டம் தேவை.இவற்றைப் பரிசீலித்தபின், கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.அனைத்து சங்கங்களும், நடைபெறவிருக்கும் நவம்பர் 26 அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிப்பதுடன் அனைத்து விவசாயத் தொழிலாளர்களும் அவற்றில் முழுமையாகப் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. விவசாயத் தொழிலாளர்கள் கிராம அளவில் வேலைநிறுத்தங்கள் மேற்கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவார்கள்.தில்லியில் பேரணி நடத்திட அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு விடுத்துள்ள அறைகூவலை ஆதரிப்பதுடன் அதில் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் டிசம்பர் 9 அன்று தலித்பிரச்சனைகள் மற்றும் சாதி அட்டூழியங்களுக்கு எதிராக ஒரு நாள் கூட்டு அகில இந்திய சிறப்பு மாநாடுநடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. சிறப்பு மாநாட்டில் இப்பிரச்சனைகள் மீது அகில இந்திய அளவில் இயக்கங்களைக் கொண்டுசெல்ல தீர்மானிக்கப்படும்.டிசம்பர் 6 - டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நினைவு தினத்தன்று ‘அரசமைப்புச்சட்டத்தைப் பாதுகாப்போம்’ தினம் அனுசரிக்கப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அன்றைய தினம் மாவட்ட அளவில் இயக்கங்கள் நடத்தி, அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலுக்கு எதிராகதற்போதைய தேசிய ஜனநாயகக்கூட்டணி அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை மக்கள்மத்தியில் அம்பலப்படுத்தப்படும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். (ந.நி.)