சென்னை:
வாக்கு எண்ணிக்கை மேஜையை குறைக்கக் கூடாது.ஏற்கனவே உள்ளநடைமுறையையே பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்சார்பில் நேரில் கடிதம் அளிக்கப் பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிற்கு எழுதிய கடிதத்தை ஏப்ரல் 21 அன்று கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ. ஆறுமுக நயினார், வெ. ராஜசேகரன் ஆகியோர் நேரில் சந்தித்து அளித்தனர்.
அத்துடன் மே தின கொடியேற்று விழா நிகழ்ச்சிகளுக்கு தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி தடை விதிக்கக்கூடாது எனவும், தூத்துக்குடி மாவட்டம் ஏ குரூப் பாசன நிலங்களுக்கு கார் பருவத்திற்கான தண்ணீரை முன்கூட்டியே திறந்து விட வேண்டுமெனவும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் கடிதம் மூலம் வற்புறுத்தப்பட்டது. இக்கடிதங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். கடித விபரம் வருமாறு:கடந்த ஏப்ரல் 6 அன்று நிறைவு பெற்ற தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள், மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்டு அவை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிற மையங் களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வருகிற மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தினுடைய அறிவிப்பாணை மூலம் தெரிவிக்கப்பட்டு அதற்கான தயாரிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அனைத்துக் கட்சி கூட்டங்களை கூட்டி வாக்கு எண்ணும் மேஜைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான ஆலோசனையை தெரிவித்ததாக நாங்கள் அறிகிறோம். இன்று கொரோனா பெருந் தொற்று பெருமளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் அதிலிருந்து மக்களைபாதுகாப்பதற்கான பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது. அதனுடைய பகுதியாக மேற்கண்ட ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.
மாநில அளவில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை கூட்டி அவர்களுடைய கருத்தின் அடிப்படையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சில பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பதும், அதே நேரத்தில் வாக்குஎண்ணிக்கையை சுமூகமாக குறித்தகாலத்திற்குள் நடத்தி முடிப்பதற்குமான முடிவுகளை எடுப்பதற்கு பதிலாக மாவட்டங்களுக்கு நேரடியாக தேர்தல் ஆணையம் தாக்கீது செய்திருப்பது சரியல்ல என்று கருதுகிறோம்.ஏற்கனவே வாக்குச் சாவடி முகவர்கள் கொரோனா சோதனை எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும், கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ள நிலையில் அதற்கு மேல் தொற்று பரவாமல் இருப்பதற்கு வாக்கு எண்ணிக்கை மேஜைகளை சுருக்குவது பொருத்தமற்றதாகும் என்பதை அழுத்தமாக சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
மேலும் இவ்வாறு மேஜை எண்ணிக்கையை சுருக்குவது வாக்கு எண்ணிக்கை எண்ணுவதற்கு பல மணி நேரம் நீடிப்பதற்கே வழிவகை செய்யும். சில தொகுதிகளில் இரண்டுநாட்கள் வரை நீட்டிக்கும் என தெரியவருகிறது. இவ்வாறு அதிகமான நேரம் ஒரே அறையில் அதிகமானவர்கள் இருப்பது தான் தொற்று பரவலுக்கு வழிவகுக்கும். மேலும் வாக்கு முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு பலவிதமான முறைகேடுகள் நடைபெற வாய்ப்புகள் ஏற்படும்என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். கட்டுப்பாடுகள் 30.4.2021 வரைஅறிவிக்கப்பட்டிருக்கிற சூழலில்குறித்த நேரத்திற்குள் ஏற்கனவே திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கையை நடத்திட, மேஜை எண்ணிக்கைகளை குறைக்காமல் வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடிப்பது நல்லது என்பதை நாங்கள்கருதுகிறோம். மேலும் இது சம்பந்தமாக மாநில அளவில் அங்கீகரிக்கப் பட்ட அனைத்துக் கட்சி தலைவர்களது கூட்டத்தை நடத்தி முடிவுகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.