tamilnadu

img

கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது... சுகாதாரத் துறைச் செயலாளர் விளக்கம்...

சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு வேகமாக பரவியதோ, அதே அளவுக்கு இப்போது வேகமாக குறைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் முதல் வேகமாக பரவி வந்தது.ஆரம்பத்தில் வெளிநாடு சென்று திரும்பிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மளமளவென கொரோனா பரவியது.கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள தொடங்கியது. விமான நிலையம், ரயில் நிலையம், துறைமுகம் ஆகிய இடங்களில் பரிசோதனை முகாம்களை நடத்தியும், கொரோனா வைரஸ் பரவுவது தடுக்க முடியாமல் போனது.

இதனால் மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. அதன் பிறகு கொரோனா பரிசோதனை முகாம்களை சுகாதாரத்துறை வீதி தோறும் நடத்தியது.ஆனாலும் கடந்த ஜூன் மாதம் வரை கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாகவே இருந்து வந்தது. தினமும் 120-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி வந்தனர்.தினமும் 2,500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு வந்தது. இதனால் இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் முடுக்கிவிட்டது. முகக் கவசம் அணிவது, கைகளை நன்றாக கழுவுவது, நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்வது,அதிக சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது,சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தது.இதன் காரணமாக மற்ற மாநிலங்களுக்குமுன் உதாரணமாக தமிழகத்தில் கொரோனா பரவுவது வேகமாக குறைந்து விட்டது.இதுகுறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-தமிழகத்தில் கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு வேகமாக பரவியதோ, அதே அளவுக்கு இப்போது வேகமாக குறைந்து வருகிறது. இதற்கு காரணம் மக்களின் ஒத்துழைப்பு என்றுதான் கூற வேண்டும்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறையினர் எடுத்துக் கொண்ட பல்வேறு முயற்சிகளும் இதற்கு பலன் அளிப்பதாக இருந்தது.கொரோனாவை கட்டுப்படுத்த வீதிக்கு வீதி காய்ச்சல் முகாம்களை நடத்தியது பெரிதும் பலன் கொடுத்துள்ளது. களப்பணியாளர்கள் வீடு தோறும் சென்று கணக்கெடுப்பு செய்து யார்-யாருக்கு எல்லாம் நோய் அறிகுறி உள்ளது என்பதை கேட்டறிந்து அவர்களை சிகிச்சைக்கு உட்படுத்துமாறு விழிப்புணர்வுகளை உருவாக்கினர்.

இதனால் பொதுமக்கள் அனைவரும்தங்களை தாங்களே தயார் படுத்திக்கொள் ளும் அளவுக்கு மன தைரியத்துக்கு வந்தனர். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சத்தான உணவுகளை சாப்பிடுவது, கபசுர குடிநீர் அருந்துவது போன்றவை உட்கொண்டதன் பலனாக பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் தற்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விட்டது.சமூக இடைவெளி யையும் பலர் கடைபிடித்து வருகின்றனர். முக கவசம் அணிந்தால் பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற கருத்தில் பலரும் முக கவசம் அணிந்து வருகின்றனர். இதுவும் கொரோனாவை கட்டுப்படுத்த காரணமாக இருந்தது.ஒருசிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக அவர்கள் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்பி விடுகிறார்கள்.ஆரம்பத்தில் சென்னையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. ஆனால் இப்போது 300-க்கும் கீழ் குறைய தொடங்கி விட்டது.சில மாவட்டங்களில் 10 முதல் 15 பேர் வரை மட்டுமே கொரோனா பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அவர்களும் விரைவில் குணம் அடைந்து விடுகிறார்கள்.ஒவ்வொரு மாநிலத்திலும் பண்டிகை காலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. அதேபோல் தமிழ்நாட்டிலும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகரித்து விடும் என்று பலர் அச்சப்பட்டு வந்தனர். ஆனாலும் அரசு சொன்ன வழிமுறைகளை பலர் கடை பிடித்ததன் காரணமாக கொரோனா அதிகரிக்கவில்லை. இது மிகப்பெரிய ஆறுதலான வி‌ஷயமாகும்.

தற்போது கொரோனா குறைந்து விட்டது என்பதற்காக பரிசோதனைகளை குறைக்கக் கூடாது என்று மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். கொரோனா நோயை முற்றிலுமாக ஒழிப்பதை கொள்கையாக கொண்டு செயல்பட பல்வேறு வழிமுறைகளை வகுத்து கொடுத்துள்ளோம்.அதன்படி நோய் தடுப்பு பணிகளை குறைக்கக்கூடாது. தொடர்ந்து அந்தபணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.குறிப்பாக மாநகராட்சி பகுதிகள், பெரிய மாவட்டங்கள், கேரளா, கர்நாடகாவையொட்டிய மலைபிரதேச மாவட்டங்களில் நோய் பரவ சாத்தியகூறு உள்ளதால் அங்கு சிறப்பு கவனம் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.காய்ச்சல் முகாம்களை தொடர்ந்து நடத்தி ஆரம்ப கட்டத்திலேயே நோய்களை கண்டு அறிந்து சிகிச்சை அளிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு நோய்களையும் தடுக்க முடிகிறது. அரசு சொல்லும் வழிமுறைகளை மக்கள் கடைபிடித்து வருவதால் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.