சென்னை, ஏப். 17 - இந்தியாவின் வெற்றிக்கணக்கை தமிழகத்திலிருந்து தொடங்குவோம் என்று திமுக தலைவரும், முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் நம்பிக்கையோடு கூறினார்.
தென்சென்னை வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்பாண்டியன், மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோருக்கு வாக்கு கேட்டு புதனன்று (ஏப். 17) பெசன்ட் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதன் சுருக்கம் வருமாறு:
தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பய ணம் செய்து, மக்களின் முகத்தில் தெரிந்த எழுச்சியை யும், மகிழ்ச்சியையும் பார்த்து சொல்கிறேன் 40/40 தொகுதிகளை யும் வெல்வோம். நாட்டையும் இந்தியா கூட்டணிதான் ஆளப்போகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல வட மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது.
பிரதமர் மோடியின் சர்வாதிகார மனப்பான்மை, மாநிலங்களை நசுக்கும் எதேச்சாதிகாரம், பிளவை உருவாக்கும் மதவாதப் பேச்சு, எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் பாசிச எண்ணம்தான் இதற்கு காரணம்.
எதிர்க்கட்சிகளே கூடாது என்று இரண்டு முதலமைச்சர்களை சிறையில் அடைத்தார். காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கட்சிகளின் வங்கிக் கணக்குகளை முடக்கினார். கார்ப்ரேட்களின் முன்னேற திட்டங்களைத் தீட்டியதால் விலை வாசி விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது. நடுநிலை வாக்காளர்களும் பாஜகவை வெறுக்கத் தொடங்கி விட்டனர்.
தேர்தல் பத்திர ஊழல் மோடியின் ஊழல் முகத்தைப் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. மோடி போல் ஒரு வசூல் ராஜாவை வரலாறு பார்த்ததில்லை. கொரோனாவில் பி.எம். கேர்ஸ் நிதி என வசூல் வேட்டை நடத்தினார். 7 லட்சம் கோடி ஊழலை அம்பலப்படுத்திய சிஏஜி அறிக்கை வெளியிட்ட தணிக்கைத்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தார்.
ரஃபேல் ஊழல்
காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானத்தை 526 கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் செய்தனர். அதே விமானத்தை பாஜக 1670 கோடி ரூபாய்க்கு வாங்கினார்கள். இதனால், பயனடைந்தது யார்? பல ஆயிரம் கோடி ரூபாய் கார்ப்பரேட் கடன் தள்ளுபடி குறித்து ராகுல் காந்தி கேட்டதற்கு பதில் சொல்லா மல், தனிநபர் தாக்குதல் நடத்தி, அவரது எம்.பி., பதவியை பறித்தார்கள். இதற்கு பிறகும் ஊழலைப் பற்றி மோடி பேசலாமா? ஊழலை சட்டப்பூர்வமாக்கிய சாதனையாளர் மோடி.
ஆன்டி இந்தியா
ஊழல்வாதிகளை கட்சியில் சேர்த்து வழக்குகளை திரும்பபெறு வது குறித்து நடுநிலையாளர்கள் நாக்கைப் பிடுங்குவது போன்று கேட்கிறார்கள். எந்த மான உணர்ச்சி யும் இல்லாமல், திரும்ப திரும்ப அதே செயலில் பாஜக ஈடுபடுகிறது. பாஜகவினரின் தில்லு முல்லு பற்றி பேசினால் ஆன்டி இந்தியன் என்பார்கள். இந்தியா கூட்டணியை அமைத்ததும், இந்தியாவை பாரத் என்கிறார்கள். இப்போது பாஜகவினர் ஆன்டி இந்தியன்களாக சுற்று கின்றனர்.
மதத்தை வைத்து கட்சி வளர்க்கிறார்கள். கலவரக் கட்சி யாக பாஜக உள்ளது. ஒருவர் சாமிக்கு பொரி வைத்து படைப்பார். மற்றொருவர் கறி வைத்து படைப்பார். இது அவரவர் வழிபாட்டு முறை. மோடியும் - பாஜகவும் மக்களிடம் எதை சாப்பிட வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள். மக்கள் என்ன சாப்பிட்டாலும், அந்த சோற்றில் மண்ணை அள்ளி போடாதீர்கள்.
இரவு 12 மணிக்கு தனியாக பேய்ப் படம் பார்க்கும் மக்கள், டிவி-யில் மோடி பேசப்போகிறார் என்றால் பலருக்கும் நெஞ்சம் படபடக்கிறது. அந்தளவுக்கு மக்களை மன ரீதியாக பயத்திற்கு ஆளாக்கி உள்ளார் மோடி. பணமதிப்பிழப்பின் வாயிலாக கருப்புப் பண ஒழிப்பு என்ற மோடி மஸ்தான் வித்தை காட்டினார்.
ஜிஎஸ்டி கொண்டு வந்து மாநிலங்களின் அனைத்து நிதி அதிகாரத்தையும் ஒன்றிய அரசுக்கு மாற்றினார். அரிசி, பருப்பு, சேமியா, சர்க்கரை, மஞ்சள் துணிகளுக்கு 5 விழுக்காடு வரி விதித்தார். ஆன்மிக காவலர்கள் போன்று பேசும் பாஜக சூடத்திற்கு 18 விழுக்காடு போட்டுள்ளது. மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களுக்கு 12 விழுக்காடு வரி விதித்து ஏழைகளை கொள்ளையடிக்கிறது.
ரவுடி கலாச்சாரம்
ரவுடி கலாச்சாரத்தை ஒழிப்பதாக கூறிய மோடி, பாஜகவில் சேர்ந்த ரவுடிங்களை ஒழிப்பதற்கு மாறாக, மாநில அரசின் இலவச திட்டங்களை ஒழிக்கப் பார்க்கிறார். மக்கள் நலத்திட்டங்களை இலவச திட்டங்கள் என்று குறுகிய பார்வையோடு அணுகினார். கார்ப்பரேட்களுக்கு வரிச் சலுகையை அள்ளிக்கொடுத்த மோடி, மக்களின் வறுமையிலும், இயலா மையிலும் கூட லாபம் பார்க்கிறார்.
இந்த லட்சணத்தில் தன்னுடைய பத்தாண்டுகால ஆட்சி டிரெய்லர் என்கிறார். டிரெய்லரே கர்ண கொடூர மாக இருக்கிறதே படம் ஓடுமா? கண்டிப்பாக படம் ரிலீஸ் ஆகாது. 10 ஆண்டு ஆட்சி சூப்-தானாம். விருந்து தயாராகிட்டு இருக்கிறதாம். சூப்பே இவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று மக்கள் வாந்தி எடுக்கிறார்கள். விருந்துக்கெல்லாம் வர மாட்டார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளில் என்ன செய்தோம் என்று சொல்லி வாக்கு கேட்கிறோம். இப்படி வாக்குறுதிகளை சொல்லி மோடி வாக்கு கேட்கிறாரா? பிரச்சார மேடைகளை மக்களை பிளவு படுத்துவதற்கான வாய்ப்பாகத்தான் பார்க்கிறார். சாதி, மதம், உணவு வேறு பாடுகளைப் பற்றி பேசி வெறுப்பு ணர்ச்சியை விதைக்கிறார். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அமைதியான இந்தியா, அமளி யான இந்தியாவாக மாறிவிடும். ஜன நாயகம் இருக்காது. நாடாளு மன்றத்தில் விவாதம் இருக்காது. சட்டமன்றங்கள் இருக்குமா என்பதே சந்தேகம். ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே உடை, ஒரே உணவு என்று ஒற்றை சர்வாதிகார நாடாக மாற்றிவிடுவார்கள். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால்தான் இந்தியா வளம் பெறும்.
இந்தியாவை இந்தியா கூட்டணி ஆளவேண்டும் என்கிறோம். அதிமுகவும், எடப்பாடி பழனி சாமியும் யார் உண்மையான எதிரி என்றே தெரியாமல், பாஜகவுக்கு ஆதாயம் தேடித்தர பி-டீமாக களத்தில் நிற்கின்றனர். கூட்டணி முறிந்துவிட்டதாக கூறிக்கொண்டு, அரசியல் தத்துவ மேதைகளே மயங்கி விழுவது போன்று புதுப்புது தத்துவங்களை எடப்பாடி கூறு கிறார். பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைத்திருக்கிறார்.
தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, மாநிலத்தை பாழ்படுத்திய அதிமுக என்ற இந்த துரோகக் கூட்டணியை ஒருசேர வீழ்த்துவோம். இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்துதான் எழுதப்பட வேண்டும். இந்தியாவின் வெற்றிக்கணக்கைத் தமிழ்நாட்டில் தொடங்கி எழுதுவோம்.
இந்த பிரச்சாரக் கூட்டத்திற்கு திமுக சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்,ஆம் ஆத்மி கட்சித் தலைவர் வசீகரன்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், மாவட்டச் செயலாளர்கள் தா.வேலு எம்எல்ஏ (தென்மேற்கு), நே.சிற்றரசு (சென்னை மேற்கு), சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். அரவிந்த் ரமேஷ், அசன் மவுலானா, ஜெ.கருணாநிதி, ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, டாக்டர் எழிலன் நாகநாதன், எம்.கே.மோகன், அ.வெற்றியழகன், சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.