tamilnadu

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு முக்கிய செய்திகள்

லஞ்ச புகார்: ஆலந்தூர் வருவாய் அதிகாரி பணி நீக்கம்

ஆலந்தூர், ஜன.4- சென்னை பெருநகர மாநகராட்சியின் 12 ஆவது மண்டல மாக ஆலந்தூர் உள்ளது. இங்கு உதவி வருவாய் அதிகாரியாக பணிபுரிபவர் பாலசுப்பிரமணியன். இவர் லஞ்சம் பெற்றுக்கொண்டு கட்டிடங்கள், ஓட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வரியை குறைத்து விட்டதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கடந்த வாரம் பாலசுப்பிரமணியத்திடம் விசாரணை செய்தனர். புகார்கள் குறித்து விளக்கம் கேட்டனர். இதையடுத்து, விசாரணை அறிக்கையை, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் அளித்த னர். அதன் அடிப்படையில் ஆலந்தூர் மண்டல உதவி வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை பெரு நகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பிறப்பித்துள்ளார்.

பெட்ரோல் பங்கில் ரூ.1 லட்சம்  திருடிய 2 பேர் கைது

சென்னை, ஜன.4- ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் கேசியராக வேலை பார்ப்பவர் தினகரன். சம்பவத்தன்று காலை 6 மணிக்கு பெட்ரோல் பங்க்கில் வசூலான பணம் ரூ. 1 லட்சத்துடன் பங்க் அருகே நின்ற ஒரு ஆட்டோவில் தூங்கிக்கொண்டிருந்தார். இவர் கண்விழித்து பார்த்த போது, பணத்தை யாரோ திருடிச் சென்றது தெரிந்தது. இது குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ஆட்டோ நின்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவு களை ஆய்வு செய்தனர். அப்போது, 2 வாலிபர்கள் பணத்தை திருடிய காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த 2 வாலிபர்கள் யார் என்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஐஸ்அவுஸ் ராஜாஜி நகரை சேர்ந்த சரவணன், ராயப்பேட்டையை சேர்ந்த காமேஷ் என்பது தெரிய வந்தது. பின்னர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து

பொன்னேரி,ஜன.4- பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. சனிக்கிழமையன்று (ஜன.4) காலை பொன்னேரி சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று பள்ளிக்கு சென்றது. இதில் 20க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். பொன்னேரி - தச்சூர் சாலையில் பெருஞ்சேரி பகுதியில் வேன் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் சாலை யோரம் இருந்த மழை நீர் கால்வாயில் வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10 மாணவர்கள் காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையி னர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்திலிருந்து தவறி விழுந்த நடத்துனர் பலி

மதுராந்தகம், ஜன.4- கும்பகோணத்திலிருந்து அரசு விரைவு சொகுசுப் பேருந்து ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த வைரவ மூர்த் என்பவர் நடத்து னராக இருந்தார். பேருந்து செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் வந்தபோது,பயணிகளை இறக்கு வதற்காக, பேருந்தின் முன்பக்க கதவைத் திறக்க நடத்துனர் முயற்சித்துள்ளார். அப்போது பேருந்தின் ஓட்டுநர் கதவைத் தானியங்கி மூலம் திறந்துள்ளார். அதைக் கவனிக்காத நடத்துனர் படியில் இறக்கும் போது தவறி கீழே விழுந்தார். இதில் வைரவமூர்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  உடனே அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பிறகு மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் வைரவ மூர்த்தி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;