tamilnadu

சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருநெல்வேலி முக்கிய செய்திகள்

ஊட்டச்சத்தின் முக்கியத்தும் சென்னையில் கருத்தரங்கம்
சென்னை, டிச.31 ஆரோக்கியமாக வாழ்வதற்கு, நல்ல, சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம்.  ஆனால் வாழ்க்கை முறை நடைமுறைகள் மற்றும் பரபரப்பான கால சூழ்நிலைகள் காரணமாக, மக்களின் அன்றாட உணவுகளில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதற்கு இப்போதெல்லாம் வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் தற்போதைய ஊட்டச்சத்துக் குறைபாட்டு நிலையை நிவர்த்தி செய்வதற்கும், நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான உத்திகளை விளம்பரப்படுத்துவதற்கும், சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் நிலைத்த வாழ்வியல் ஆகியவற்றுக்காக செயல்படும் உலகளாவிய அறிவியல் சார்ந்த நிறுவனம் நியூ சக்தி சென்னையில் உணவு மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டுக்கான மாநாடு மற்றும் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் 60க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் மற்றும் இந்தத் துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர், அனைத்து வயதினரிடையேயும் உள்ள நுண்ணூட்டச்சத்து குறை பாட்டின் முழு தாக்கங்களையும் புரிந்து கொள்ளவும், சிக்கலை எதிர்த்துப் போராடுவதில் உணவு வலுவூட்டல் அல்லது ஊட்டச்சத்து உணவு பங்கை புரிந்து கொள்ளவும் இந்தக் கருத்தரங்கம் வகை செய்தது.

மிதவை அணு மின் நிலையம் உற்பத்தியை தொடங்கியது
சென்னை, டிச.31 உலகின் முதல் மற்றும் ஒரே மிதவை அணு மின் நிலையமான அகாடமிக் லொமொனோசோவ் தன் ஆரம்பப் பரிசோதனைகள் அனைத்தையும் முடித்து, தற்போது தொடர் மின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. இதை யொட்டி, இந்த மின் நிலையம் ரஷ்யாவின் தூரக்கிழக்கு பகுதிக்கான மின் வினியோக வலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அணுக்கதிர் வீச்சு தொடர்பான ரஷ்யாவின் வழிகாட்டு ஆணையமான ரொஸ்டேக்னட்ஸ்வ்ர் ஒப்புதல் தந்ததைத் தொடர்ந்து, அகாடமிக் லொமொனோசோவ் தனது வர்த்தக ரீதியான செயல்பாட்டைத் தொடங்க முடிவு செய்துள்ளது. எனவே, அதன் மின்னுற்பத்தியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் இவ்விணைப்பு நிகழ்ந்துள்ளது. இந்தப் புதிய மின் நிலைய உற்பத்தியைப் பெறும் கடற்கரை நகரமான ‘பிவெக்’ -ல் வாழும் மக்கள், இதை உற்சாகத்துடன் வரவேற்றுக் கொண்டாடினர். உலகின் பல நாடுகளில் உள்ள அறிவியல் அறிஞர்கள், அணு மின்னுற்பத்தி நிபுணர்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் இந்த மிதவை அணு மின் திட்டத்தை வரவேற்று பாராட்டியுள்ளனர்.

சாலையில் கிடந்த குழந்தை மீட்பு
செங்கல்பட்டு, டிச.31- காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த மெய்யூர் கிராமத்தில் திங்களன்று இரவு 2 மாதமே ஆன ஆண் குழந்தை ஒன்று சாலையோரம் கிடந்தது. அவ்வழியாக வந்தவர்கள் தனியாக குழந்தை இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததனர். பின்னர் இது குறித்து சாலவாக்கம் காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை யினர் குழந்தையை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குழந்தையை சைல்டு ஹெல்ப் லைன் அலுவலர்க ளிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர். இந்த குழந்தை யார்? தனியாக விட்டு சென்றது யார்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் ஒருவர் பலி
மதுராந்தகம், டிச.31-  திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த மேலானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (35). இவர் இருசக்கர வாகனத்தில் வந்த வாசியிலிருந்து மேல்மருவத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். செண்டிவாக்கம் என்ற இடத்தில் சாலையில் இருந்த வேகத்தடையைக் கடக்கும் போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. அப்போது மேல்மருவத்தூரிலிருந்து வந்தவாசி நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ஜெயப்பிரகாஷின் உடலை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு: வியாபாரிகளுக்கு அபராதம்
திருநெல்வேலி, டிச.31- நெல்லை மாநகர பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய வியாபாரிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின் பேரில், மாநகர சுகாதார அலுவலர் சதீ‌‌ஷ்குமார்மேற்பார்வை யில் 4 மண்டலங்களுக்கு தனித்தனியாக குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் தனியார் நிறுவனங்கள், டீக்கடைகள், பெட்டிக்கடைகள், இறைச்சி கடைகள், மீன் கடைகள் உள்ளிட்ட கடைகளில் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மண்டலஉதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் தலைமையில், சுகாதார அலுவலர் அரச குமார், சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோ, நடராஜன் மற்றும் அதிகாரிகள் நெல்லை சந்திப்பு பகுதியில் சோதனை செய்தனர். ரயில்வே பீடர் ரோடு பகுதிகளில் உள்ள கடைகள், டீக்கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு 10 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் நெல்லை டவுன் பகுதிகளிலும் சோதனை செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் பாளையங்கோட்டை பகுதியிலும் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்தனர். மொத்தம் 5 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

;