tamilnadu

img

17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எச்சரிக்கும் வானிலை மையம்!

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம், தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்கு பருவமழை அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லார் 10 செ.மீ., கடலூர் மாவட்டம் தொழுதூர் 8 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;