tamilnadu

img

100 நாள் வேலை கேட்டு சிபிஎம் காத்திருக்கும் போராட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் உடனடியாக வேலை வழங்கிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது
சமூக நீதி, சுயமரியாதையை நிலை நாட்டும் 100 நாள் வேலை உறுதிச் சட்டத்தை மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் உள்ளார்ந்த உறுதியோடு அமலாக்கிட வேண்டும், மார்ச் 31க்குள் 100 நாளுக்கான வேலை வழங்கிட பணி யாணை வழங்கிட வேண்டும்,
சட்டத்தில் உள்ளபடி வேலை வழங்காத நாட்களுக்கு கூலிக்கான தொகையில் 50 விழுக்காட்டை வழங்க வேண்டும், மாதக் கணக்கில் கூலி பாக்கி உள்ள வர்களுக்கு சட்டப்படி 10 விழுக்காடு தாமதக் கட்டணத்துடன் கூலியை வழங்க வேண்டும், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட ஊராட்சிகளில் தொடர்ந்து ஊரக வேலை உறுதித் திட்டத்தை அமலாக்க வேண்டும் அல்லது அப்பகுதிகளுக்கு நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்தை அமலாக்க சிறப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி
யுறுத்தி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காட்டாங்குளத்தூர், திருப்போரூர், மதுராந்தகம், அச்சிறு பாக்கம், சித்தாமூர் உள்ளிட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன்பு காத்தி ருக்கும் போராட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்சியின் செங்கல்பட்டு பகுதி குழு செயலாளர் கே.வேலன் தலைமையில் மாவட்ட செயலாளர் பி.எஸ்.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ. சங்கர், மாவட்ட குழு உறுப்பினர்கள் எம்.குமார், க.ஜெயந்தி, வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் இரா.சதீஷ் உள்ளிட்ட பலர் பேசினர். போராட்டத்தை நிறைவு செய்து கட்சியின் மாநில குழு உறுப்பினர் எம்.மாரியப்பன் பேசினார். முன்னதாக கட்சியின் நிர்வாகிகள் செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினர்.