tamilnadu

img

சிங்காரம் பள்ளி இடத்தை மீட்க நடவடிக்கை... சிபிஎம் தலைவர்களிடம் மாநகராட்சி ஆணையர் உறுதி

சென்னை:
சிங்காரம் பள்ளி இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உறுதி அளித்துள்ளார்.

வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை மேல்நிலைப் பள்ளி இடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்றிவிட்டு மீண்டும் கல்வி பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி செவ்வாயன்று (டிச.29)  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா ஆகியோர் மனு அளித்தனர்.

அந்த மனுவின் சுருக்கம் வருமாறு:
சிங்காரம்பிள்ளை அரசினர் உதவிபெறும் பள்ளி இடத்தை சட்ட விரோதமாக அறக்கட்டளை நிர்வாகம் விற்பனை செய்துள்ளது. அந்த இடத்தில் இருந்த வகுப்பறைகளை இடித்துவிட்டு மெட்ராஸ் சூப்பர் ஸ்டோர் என்ற பெயரில் வணிக வளாகம், காய்கறி கடை, கணபதி பவன் உணவகம் கட்டப் பட்டுள்ளது.தமிழ்நாடு பள்ளிகள் ஒழுங்குப் படுத்துதல் சட்டம்-1948, தமிழக பள்ளிக் கல்வி இயக்குனரின் வழிகாட்டுதல்படி, அரசு உதவிபெறும் பள்ளியின் நிலத்தை அடகு வைக்க, விற்பனை செய்ய, தானமாக கொடுக்க அல்லது வேறு பயனுக்கு வழங்கக் கூடாது. இந்நிலையில் அரசின் விதிமுறைகளை மீறி, பள்ளியின் நிலம் வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 4 நபர்களுக்கு சட்டவிரோதமாக பதிவு செய்துள்ளனர்.மெட்ராஸ் சூப்பர் ஸ்டோர், கணபதி பவன் கட்டிடங்களுக்கு சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் திட்ட அனுமதி வழங்கப்படவில்லை. கணபதி பவன் உணவகத்திற்கு மாநகராட்சி தொழில் உரிமம் வழங்கவில்லை. மேலும், மெட் ராஸ் சூப்பர் ஸ்டோர். காய்கறி கடை, கணபதி பவன் உணவகம் ஆகியவை வியாபார ஸ்தலங்கள் தனித்தனியாக வாகன நிறுத்த இடத்திற்கான அனுமதியை இது வரை கோரமல் உள்ளது.எனவே, விதிமுறைகளை மீறியும், அனுமதியின்றியும் செயல்பட்டு வரும் மெட்ராஸ் சூப்பர் ஸ்டோர். காய்கறி கடை, கணபதி பவன் உணவகம் ஆகியவற்றின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும். பள்ளி இடத்தை அரசு அனுமதியின்றி வணிக வளாகமாக மாற்றியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி இடத்தை மீட்டு மீண்டும் கல்வி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்றுக் கொண்ட ஆணையர் பிரகாஷ், புகார் மீது ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தெரிவித்தார்.

;