tamilnadu

img

3 குற்றவியல் சட்டங்களின் அமலாக்கத்தை நிறுத்தி வைத்திடுக: வழக்கறிஞர்கள் போராட்டம்

சென்னை, ஜூன் 25 - ஒன்றிய அரசு செயல் படுத்த உள்ள 3 குற்றவி யல் சட்டங்களை நிறுத்தி வைக்க கோரி செவ்வா யன்று (ஜூன் 25) சென்னை  உயர்நீதிமன்ற வழக்கறி ஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய தண்டனைச் சட்டம்- 1860, இந்திய சாட்சியச் சட்டம்- 1872, குற்றவியல் நடைமுறைச் சட்டம் - 1983 ஆகிய சட்ட ங்கள் நடைமுறையில் உள்ளன.

இவற்றிற்கு மாற்றாக ஒன்றிய அரசு கடந்தாண்டு டிசம்பர் மாதம் பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா -2023 (இந்திய சிவில் பாது காப்புச் சட்டம்), பாரதிய நியாய சன்ஹிதா - 2023 (இந்திய நியாயச் சட்டம்), பாரதிய சாக்ஷிய அதினியம் (இந்திய சாட்சியச் சட்டம்) ஆகிய மூன்று புதிய குற்ற வியல் சட்டங்களை கொண்டு வந்துள்ளது.

இந்த சட்டங்களை ஜூலை 1ந் தேதியில் இருந்து அமலாக்க உள்ள தாக ஒன்றிய அரசு தெரி வித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர்கள், முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த சட்ட அமலாக்கத்தை நிறுத்தி வைக்கக் கோரி கடந்த சில தினங்களாக தமிழ்நாடு முழுவதும் வழக் கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜூன் 25 அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

சென்னை உயர்நீதி மன்றம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்டு 7 அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

விஜயகுமார்

ஜனநாயகம் மற்றும் சமூக நலனுக்கான வழக்க றிஞர்கள் சங்கத்தின் தலைவர் விஜயகுமார் குறிப்பிடுகையில், “எதிர்க்கட்சி உறுப்பி னர்களை தற்காலிக நீக்கம் செய்துவிட்டு, நாடாளு மன்ற நடைமுறைகளை பின்பற்றாமல், சர்வாதிகார முறையில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 3 குற்ற வியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டங்களை அமல்படுத் துவதை நிறுத்தி வைக்க  வேண்டும். புதிய நாடாளு மன்றம் ஜனநாயகப் பூர்வமாக விவாதித்து முடிவுக்கு வரும் வரை அமல்படுத்தக் கூடாது.

குடியரசு தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு மின்ன ஞ்சல் வாயிலாக கடிதம் அனுப்பியுள்ளோம்.” என்றார்.

மதவாத சக்திகளுக்கு உறுதுணையாக பல பிரிவுகள்

இந்த போராட்டத்தில் பேசிய அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.சிவக்குமார், “இந்திய அரசியலமைப்புச் சட்டம்,348வது பிரிவுப்படி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் அனைத்து சட்டங்களும் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும். மாறாக, புதிய 3 சட்டங்களுக்கு சமஸ்கிரு தத்தில் பெயர் வைத்துள்ளனர்.

இந்த குற்றவியல் சட்டங்கள் சாதாரண மக்களுக்கும் எதிரானது. வழக்கறிஞர்கள், பார் கவுன்சில், நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் சட்டத்தை நிறைவேற்றியுள்ளார். காலனி ஆதிக்கத்தை ஒழிப்பதற்கு மாறாக இந்தி மேலாதிக்கத்தை புகுத்துவதாக இந்தச் சட்டங்கள் உள்ளன.

நாட்டில் நடைபெறும் சூழல்களோடு பொருத்திப்பார்த்தால், 5 அல்லது அதற்கு மேற்பட்டோர் சாதிரீதியாகவும் பாலின ரீதியாகவும் கும்பல் கொலை நிகழ்த்தினால் ஆயுள் தண்டனை என்கிறார்கள். அதில்மதம் என்ற பதம் இடம் பெறவில்லை. மதவாத சக்திகளுக்கு உறுதுணையாக பல பிரிவுகள் உள்ளன இந்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை அகில இந்திய போராட்டமாக மாற்றுவோம்” என்றார்.