tamilnadu

img

சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு!

கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பெய்து வரும் தொடர் மழையால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 10 அடியாக உயர்ந்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாகக் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கோவை மாவட்டத்தின் முக்கிய நீர்நிலைகள் நீரின்றி வறண்டது.  மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி அணையின் நீர்மட்டமும் வெகுவாக சரிந்தது. இதனால் குறைவாக உள்ள குடிநீரைக் கோவை மாநகராட்சி நிர்வாகம் பகிர்ந்து விநியோகம் செய்து வந்தது. 

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாகக் கோவை மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளில் கோடை மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. கடும் வறட்சியால் 8.9 அடி அளவிற்குச் சிறுவாணி அணையின் நீர்மட்டம்  குறைந்த நிலையில்,  தற்போது பத்து அடியாக உயர்ந்துள்ளது.

சிறுவாணி அணை மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தாலும், கடும் வறட்சியால் சிறு சிறு ஓடைகள் வறண்டு இருந்ததால், அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக உள்ளது.  தொடர்ந்து இன்னும் மூன்று நாட்களுக்கு மழை பெய்தால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

;