tamilnadu

img

கொளுத்தும் வெயில்: மின்விசிறி, ஏர்கூலர் விற்பனை அதிகரிப்பு - எம். பிரபாகரன்

கொளுத்தும் வெயில்:மின்விசிறி, ஏர்கூலர் விற்பனை அதிகரிப்பு - எம். பிரபாகரன்

ஆண்டுதோறும் தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. வெப்ப அலை காரணமாக உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதிலிருந்து தற்காத்துக்கொள்ள, பொதுமக்களுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தண்ணீர், பழச்சாறு போன்ற இயற்கை பானங்களை அதிகம் அருந்த வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, நாளொன்றுக்கு ஐந்து முதல் ஏழு லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள். இந்த சூழலில், வெயிலின் கடும் தாக்கத்தால் அவதிப்படும் மக்கள், வீடுகளில் வெப்பத்தை தணிக்க, கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள, ஏசி, மின்விசிறி, ஏர்கூலர் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை அதிக அளவில் வாங்க ஆரம்பித்துள்ளனர். தற்போது, இதன் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி கணேசன் இதுகுறித்து கூறும் போது, “விசைத்தறிக் கூடங்களில் நாள்தோறும் எட்டு முதல் 12 மணி நேரம் வெப்ப சூழலில் வேலை செய்து வீடு திரும்பும் போது, வீடுகளிலும் அதே வெப்பம் தாக்குகின்றது. தனிக் குடியிருப்புகள் குறைந்து அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குறுகிய இடங்களில் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதில் காற்றோட்டமில்லாத சூழல் மேலும் புழுக்கத்தை அதிகரிக்கிறது. இதை சமாளிக்க சிறிய ஏர்கூலரை வாங்கி பயன்படுத்தி வருகிறோம்,” என்றார். மேலும், பல தொழிலாளர்கள் பழைய மின்விசிறிகளை பழுது பார்த்து மீண்டும் பயன்படுத்தும் நிலை காணப்படுகிறது. கோடை வெப்பம் மே மாதம் முழுவதும் கடுமையாக நீடிக்கும் என்பதால், வெப்பத்தைக் சமாளிக்க அனைவரும் முனைப்புடன் இயங்குவதாக அவர் தெரிவித்தார். நாமக்கல் சாலையில் உள்ள ஒரு தனியார் எலக்ட்ரானிக் கடை உரிமையாளர் கூறியதாவது, “வெயில் காலம் தொடங்கியுள்ளதால், 1000 ரூபாயில் தொடங்கி 30,000 ரூபாய் வரை உள்ள மின்விசிறி, ஏர்கூலர், ஏசி உள்ளிட்ட பொருட்களை வாங்க வாடிக்கையாளர் வருகை அதிகரித்துள்ளது. சிறிய குழந்தைகள் கோடை விடுமுறையில் வீட்டில் இருப்பதால், பெற்றோர்கள் சிறிய அளவிலான டேபிள் ஃபேன், டவர் ஃபேன் போன்ற பொருட்களை வாங்குகிறார்கள். குறிப்பாக விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் வாடகை வீடுகளில் வசிப்போர், ஏசி போன்ற உயர் செலவுடைய சாதனங்களை தவிர்த்து குறைந்த விலையில் கிடைக்கும் மின்விசிறிகளை தேர்வு செய்கிறார்கள்,” எனத் தெரிவித்தார். வெயில் வேகமுடன் அடிக்க, வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டிருக்க, மக்கள் தங்களது இயல்பான வாழ்க்கையை தொடர காற்றோட்டம் ஏற்படுத்தும் சாதனங்களைத் தேடி நகர்ந்து வருகிறார்கள். இது, கோடை பருவத்தில் எலக்ட்ரானிக் சாதன விற்பனைக்கு பெரும் உயிரோட்டம் கொடுத்துள்ளது.