சமையல் எரிவாயு உருளையின் விலையை கடுமையாக உயர்த்திய மத்திய மோடி அரசை கண்டித்து கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பாஜக அரசு உழைக்கும் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதலை தொடுத்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக கடந்த சில நாட்களில் மட்டும் நூறு ரூபாய் வரை எரிவாயு உருளையின் விலையை உயர்த்தியுள்ளது. ஏற்கனவே கொரோன அச்சத்தினால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் மோடி அரசு கொண்டு வந்த ஊரடங்கின் காரணமாக வேலை இழந்து, வருவாய் இழந்து மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலைகளை கண்மூடித்தனமாக தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதன்காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. மோடி அரசின் மக்கள் மீதான கடும் தாக்குதலை கண்டித்து கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரியாநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட சின்ன தடாகம் ஊராட்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நா.பாலமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கேசவமணி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, ரவிக்குமார் மற்றும் தடாகம் ஊராட்சி மன்ற உறுப்பினர் சௌந்திரராஜன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.