tamilnadu

img

வன்முறையை தூண்ட முயற்சிக்கும் இந்து முன்னணிக்கு அனைத்து கட்சியினர் கடும் எச்சரிக்கை

அவிநாசியில் இந்து முன்னணி அமைப்பிடமிருந்து பொதுமக்களை வியாபாரிகளை பாதுகாக்க கோரி அனைத்து கட்சியினர் காவல் நிலையத்தில் ஞாயிறன்று மனு அளித்துள்ளனர்.
ஒன்றிய அரசின் பொருளாதாரக் கொள்கை, மக்கள் விரோத போக்கு, இவற்றின் காரணமாக மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். பொருளாதார நிலை குறித்து பதில் தர முடியாதால்  நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மனுதர்மம் குறித்து உள்அரங்கில் பேசியதை  திட்டமிட்டு அரசியல் செய்வதற்காக இந்து முன்னணி அமைப்பினர் 20.9.2022 செவ்வாய்க்கிழமை பொது கடையடைப்பு செய்வதாக கூறியுள்ளனர். இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் அச்சமும், மத துவேசத்தையும் வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது. இச் செயலில் ஈடுபடுகிற இந்து முன்னணி அமைப்பின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரியும், கடையடைப்பு அறிவித்த தேதியில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்க கோரியும் திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்பினர்  ஒன்று சேர்ந்து அவிநாசி காவல் ஆய்வாளர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர்களிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சுவாமிநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, ஒன்றிய பொறுப்பாளர் பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகம், ஒன்றிய நிர்வாகி ஷாஜகான், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாய் கண்ணன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் பாபு, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;