tamilnadu

திருப்பூர் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

திருப்பூர், ஏப். 18 -திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணிக்கு முன்னதாகவே வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தனர். இத்தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.


விறுவிறுப்பான தொடக்கம்


`நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் வாக்குப்பதிவு தொடங்கும்போது வழக்கமாக சிலர் மட்டுமே வந்திருந்து வாக்களிப்பர். காலை 8 மணியில் இருந்து 10 மணிக்குள் கூடுதல் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பார்கள். ஆனால் இம்முறை சமீப காலத்தில் இல்லாத அளவுக்கு தொடக்கம் முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கே நீண்ட வரிசையில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தயாராக வந்து நின்றனர். விறுவிறுப்போடும், எழுச்சியோடும் வாக்குப்பதிவு நடைபெற்றது.வாக்குப்பதிவு தொடங்கி பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் சுமூகமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேசமயம் அரண்மனைப்புதூர் பள்ளி வாக்குச்சாவடி எண் 161ல் வாக்குப்பதிவு இயந்திரம் தற்காலிகப் பழுது காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் பழுது நீக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.அதேபோல் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அய்யங்காளிபாளையம் வாக்குச்சாவடி எண் 64லும் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவது தாமதமானது. இதுபோல் ஓரிரு வாக்குச்சாவடிகளில் சிறு தாமதம் ஏற்பட்டாலும் உடனடியாக பழுது சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு சீராக நடைபெற்றது. விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை.


வாக்காளர்களுக்கு வசதி


அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அலுவலர் தெரிவித்திருந்தார். எனினும் திருப்பூர் வடக்குத் தொகுதிக்கு உட்பட்ட சின்னச்சாமியம்மாள் பள்ளி வாக்குச்சாவடியில் குடிநீர் கேன் வைக்கப்பட்டிருந்தாலும், குடிநீரைப் பிடித்துக் குடிப்பதற்கு தேவையான குவளை எதுவும் வைக்கப்படவில்லை. அதேபோல் வாக்காளர்களுக்கு உரிய வாக்காளர் சீட்டு அவரவர் வீடுகளுக்கே அரசு நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டுவிடும் என்று சொல்லப்பட்டு இருந்தது. ஆனால் வாக்காளர்கள் சிலர் சீட்டு இல்லாமல் வாக்குச்சாவடிக்கு வந்தனர். அவர்களது வாக்குச்சாவடி எண், பாகம், வரிசை எண்கள் விபரம் தெரியாத நிலையில், அரசு நிர்வாகம் சொன்னது போல வீடுகளில் வந்து வாக்காளர் சீட்டுத் தரப்படவில்லை என்றும் புகார் கூறினர். நூறு மீட்டருக்கு அப்பால் அரசியல் கட்சிகள் வைத்திருந்த சாவடிகளில் மறுபடியும் சென்று தங்கள் பெயர், வாக்காளர் பாகம், வரிசை எண் விபரங்களை எழுதி வாங்கி வர வேண்டிய நிலை இருந்தது.


விரக்தியுடன் திரும்பிய குடும்பம்


கொங்கு வேளாளர் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் மூவர் வாக்காளர் அடையாள அட்டை சகிதமாக வாக்களிக்க வந்தனர். ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் திரும்ப அனுப்பப்பட்டனர். அவர்கள் குடியிருந்த வீடு மாறிவிட்ட நிலையில் கள ஆய்வுக்கு வந்தவர்கள் பட்டியலில் பெயர் நீக்கம் செய்திருக்கலாம் என்று தேர்தல் அலுவலர்கள் கூறினர். மாற்று ஏற்பாடு செய்ய முடியாத நிலையில் அவர்கள் விரக்தியுடன் திரும்பிச் சென்றனர்.


வாக்கு சதவிகிதம்


திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இறுதி வாக்குப்பதிவு விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தம் 72.88 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தம் பதிவான வாக்குகள் 11 லட்சத்து 15 ஆயிரத்து ஒன்று. இதில் ஆண்கள் 5 லட்சத்து 66 ஆயிரத்து 400 பேரும், பெண்கள் 5 லட்சத்து 49 ஆயிரத்து 365 பேரும், மூன்றாம் பாலினத்தார் 28 பேரும் வாக்களித்து உள்ளனர். 


அதிகபட்சமாக பெருந்துறை தொகுதியில் 81.30 சதவிகிதமும், கோபிசெட்டிபாளையத்தில் 80.67 சதவிகிதமும், பவானியில் 79.81 சதவிகிதமும், அந்தியூரில் 77.86 சதவிகிதமும் பதிவாகியுள்ளன. திருப்பூர் வடக்குத் தொகுதியில் 62.67 சதவிகிதம், திருப்பூர் தெற்குத் தொகுதியில் 62.08 சதவிகிதம் என குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன.



மூன்றாம் பாலினத்தார்


திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை 

மூன்றாம் பாலினத்தோர் ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை. ஆனால் மாலை 5 மணி நிலவரப்படி கோபியில் 4 பேரும், திருப்பூர் வடக்கு தொகுதியில் 17 பேரும், தெற்கில் ஒருவருமாக மொத்தம் 22 மூன்றாம் 

பாலினத்தோர் வாக்களித்து இருந்தனர்.





;