tamilnadu

img

பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு, ஏப். 1-பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து திங்களன்று தமிழகம் முழுவதும் பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். ஈரோடு மாவட்டத்திலும் பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திரு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு காந்திஜி ஈரோட்டில் உள்ள பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கண்ணுச்சாமி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சி.மணி கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பழனிசாமி, அனைத்துத்துறை ஓய்வூதிய சங்க கூட்டமைப்பின் மாவட்ட துணைச் செயலாளர் பரமேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


இதுகுறித்து பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் கூறும்போது,ஈரோடு மாவட்டத்தில் பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் 476 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கிராமப்புற பகுதியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரமும், நகரப்பகுதியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து திங்களன்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம் என்று தெரிவித்தனர்.

;