tamilnadu

img

பாஜகவால் டம்மியான கம்பீர்

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், தில்லி பகுதி பாஜக எம்பி.,யுமான கம்பீர் தனது குழந்தைத்தனமான செயல் மூலம் நாள்தோறும் சர்ச்சைக்கு தீனி போட்டு வருகிறார். கிரிக்கெட் விளையாட்டில் சமத்து பிள்ளை எனப் பெயர் பெற்ற கம்பீர் பாஜக கட்சியின் அரசியல் தூண்டிலில் சிக்கி இன்று நாட்டின் நகைச்சுவை நாயகனாக மாறியுள்ளார்.இதனை பற்றி விரிவாக பார்ப்போம்.   

கிரிக்கெட்டில் எப்படி?

தொடக்க வீரரான கம்பீர் டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று விளையாட்டிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர். அதிரடி ஆட்டம் இவருக்கு ஒத்துவராது என்றாலும் ரன்ரேட்டை சீராக வைத்து விளையாடக்கூடியவர். விக்கெட் சரியாமல் பார்ட்னெர்வில்புடன் நிதானமாக ரன் சேர்க்கக் கூடியவர். பந்துவீச மாட்டார். துடிப்பாக பீல்டிங் செய்யாவிட்டாலும் கேட்ச் நன்றாக பிடிப்பார். தன்னை எதிரணி வீரர்கள் சீண்டினால் அவர்களது தலையை முட்டாமல் பெவிலியனுக்கு செல்லமாட்டார். தற்போதைய கேப்டன் கோலியிடமும் ஐபிஎல் தொடரில் சண்டை போட்டுள்ளார்.  

எப்படி எம்பி., பதவி? 

2007-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் அப்ரிடி மற்றும் கம்ரான் அக்மல் ஆகியோருடன் மோதல் போக்கை கடைபிடித்தார். இந்த மோதல் சம்பவம் மூலம் தான் கம்பீர் ரசிகர்களிடம் பிரபலமானார். இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும் அப்ரிடியுடன் டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி மோதினார். கம்பீரின் செயலால் பாகிஸ்தான் மற்றும் பசுமாட்டை வைத்து அரசியல் செய்யும் பாஜக அரசோ தில்லி பகுதியில் சீட் கொடுத்து வெற்றி பெற வைத்தது. இப்படி தான் கம்பீர் எம்பி., பதவியை பெற்றார்.  

பதவியில் எப்படி?      

பதவியில் அமர்ந்த பின் கம்பீர் செருக்காக நடந்து கொள்கிறார். எம்பி., பதவி  எதற்கு அளித்துள்ளார்கள் என்பது தெரியாது போல சுழன்று வருகிறார்.  கிரிக்கெட் வர்ணனையாளர் வேலைக்கும் சரிவர செல்வதில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் எப்பொழுது டுவிட்டர் பதிவு போடுவார்கள் எப்பொழுது நாம்  பதிலடி கொடுப்பது என்பது தான் இவருடைய வேலை. தன் தொகுதி மக்களை சந்தித்து குறை கேட்பதும் கிடையாது. 

ஜிலேபி நாயகன் விருது எப்படி? 

தில்லி மாசு குறித்து ஆலோசிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்காமல் மத்திய பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான இந்தூரில் நடைபெற்ற  கிரிக்கெட் போட்டியின் வர்ணனைக்கு சென்று அங்கு ஜிலேபி சாப்பிடும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டார். சொந்த தொகுதி புகையால் மூழ்கியுள்ளதை பற்றி கவலைப்படாமல் ஜிலேபி சாப்பிட்டு போட்டோ போடுகிறாரே என தில்லி பகுதி மக்கள் கொதித்தனர். இதற்கு கடும் விமர்சனம் எழுந்த சில மணிநேரங்களில் தில்லி எம்பி., கம்பீரை காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த சம்பவம் நடைபெற்ற நாளிலிருந்து இன்று வரை “ஜிலேபி நாயகன்” என்று கிண்டலுடன் மீம்ஸ் செய்து டிரெண்டிங் செய்தனர்.

மிரட்டலான யோசனை...

ஜிலேபி விமர்சனத்தைக் கண்டு மிரண்ட கம்பீர் அதற்கு அடுத்த நாள் நாடாளுமன்ற வளாகத்தில் ஜிலேபி சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார். அதில்,”ஒப்பந்தத்தின் படி தான் இந்தூர் சென்று கிரிக்கெட் விளையாட்டுடன் ஜிலேபி சாப்பிட்டேன். நான் எம்பி., ஆகி 7 மாதம் தான் ஆகிறது. அதற்குள் என்ன ஏதென்று கேட்காமல் 10 நிமிடங்களுக்குள் என்னை டுவிட்டர்வாசிகள் விமர்சித்துவிட்டனர். இதுபோல காற்று மாசை குறைப்பதிலும் அவர்கள் ஆர்வம் காட்டியிருந்தால் தில்லி பகுதி இந்நேரம் சுத்தமாக இருந்திருக்கும். நான் ஜிலேபி சாப்பிடுவதை நிறுத்தினால் தில்லியின் காற்று மாசு குறைந்துவிடும் என்றால் அதை நிறுத்தத் தயார்” என குழந்தை தனமாக பேட்டியளிக்க ஓட்டுபோட்ட மக்கள் கூட கொதிக்கத் தொடங்கினர். தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி கண்டனத்துடன் சீறியது. தொடர்ந்து விமர்சனம் எழுந்ததால் வீட்டில் முடங்கினார்.     

அதிகாரத்திற்கு அலைகிறார் 

தில்லி கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. கிரிக்கெட் போட்டியைப் போன்று பரபரப்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் வாய்த்தகராறு கைகலப்பு வரை சென்று கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தை சாதகமாக வைத்து தில்லி கிரிக்கெட் சங்க  தலைவர் பதவியில் அமர கம்பீர் திட்டமிட்டுள்ளார். கிரிக்கெட் விளையாட்டின் மூலம் நாட்டிற்கு சேவை செய்த கம்பீர் அரசியலிலும் சேவை செய்வார் என எதிர்பார்த்த நிலையில், அதிகார பொறுப்பிற்காக தினமும் அலைந்துகொண்டிருக்கிறார். 

கிரிக்கெட், சினிமா என பல துறைகளில் இருந்து மரியாதை நிமித்தமாக எம்பி., எம்எல்ஏ நியமிக்கப்படுவது சகஜமான விஷயம்.அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள்  25% அரசியல், 75% தனது துறையை கவனிக்க சென்று விடுவார்கள். சச்சின் கூட இப்படி தான். ஆனால் கம்பீர் எந்த நிலையில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஆனால் இருந்த 90% மரியாதையை பாஜக மூலம் இழந்திருக்கிறார் என்பது மட்டும் உண்மை. 

அன்று கிரிக்கெட் ரசிகர்களை குஷிப்படுத்தினார்...  இன்று நெட்டிசன்களை குஷிப்படுத்திவருகிறார்... இப்படியே சென்றால் கம்பீரின் நிலை என்ன ஆகும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்...

 

;