கரூர், ஜன.11- கரூர் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் தேர்வு நிலை, சிறப்பு நிலை கேட்டு 2018 ஜூன் முதல் விண்ணப்பித்தவர்கள் காத்திருக்கும் போது, 2019 பிப்ரவரி மாதம் நடைபெற்ற குறைதீர் நாளில் பலர் விண்ணப்பித்திருந்தனர். இதில் நான்கு நபர்களுக்கு மட்டும் ஆணை வழங்கியதைக் கண்டித்தும், 2018-ல் விண்ணப்பித்து பல மாதங்களாக காத்திருப்பவர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பதை கண்டித்தும், உடனடியாக வழங்க வலியுறுத்தியும், ஊழியர் விரோத போக்குடன் செயல்படும் கரூர் வட்டார கல்வி அலுவலரை கண்டித்தும் வட்டார கல்வி அலுவலகத்தில் கல்வி அலுவலரை முற்றுகையிட்டு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் வட்டாரக் கிளை சார்பில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க வட்டாரத் தலைவர் அருள்குழந்தை தேவதாஸ் தலைமை வகித்தார். கல்வி அலுவலருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், இம்மாத இறுதிக்குள் ஆணைகள் வழங்கப்படும் என வட்டார கல்வி அலுவலர் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.